Part of an Incomplete fiction
நடந்து திரிந்துவிட்டு, வந்து கேட்டாயானால் என்னிடம் பதிலில்லை. எனது தீர்வுகள் நிரந்தரமானவையா,நிச்சயமானவையா எனக்குத் தெரியவில்லை. நீண்ட பாம்பொன்று தன் எல்லைகளை அடைந்து மீளவும் ஆதியில் இருந்து ஆரம்பிக்கும் அந்த சப்வே யில் எனது எல்லைகள் முடிவடைந்திருந்தன. ஆறுதலான வார்த்தைகளோ, அதற்கான வழிகளோ அற்று அடைத்திருந்த காலத்தில் அதன் முடிவிலி வரை சென்று திரும்பி தொடர்ந்து ரெயில் மாறி ரெயில் ஏறி, எனது தனிமையை, துயரத்தை, கோபத்தைத் தீர்க்கும் அக் காலத்தில், பெண்களின் முழு இரத்தமும் முழு எலும்பும் இரத்தமும், தலைமுடியும் சதையும் இதற்கு பிரத்தியேகமான பிடித்தங்களாயிருந்தன. இப்போதும் வேலை விட்டு வீடு (என்னுடைய மூட் டின்போது துப்பரவாக்கும், சமைக்கும், படம் பார்க்கும், ஆண் நண்பனைக் கூப்பிடும்), வீடு விட்டு வேலை என இந்தப் பாம்புடன் நான் என் வாழ்வின் கூடு திரும்புதல்களை எதிர்கொள்ளலாயினேன். வாழ்தலை எதிர்கொள்ளல் போல; நெடும் பிரச்சினைகளின் முடிவுகளை கண்டடைதல் போல; இவ்வளவு சுத்தி வளைக்காமற் சொன்னால் பிரச்சினைகளிலிருந்து தற்காலிகமாகத் தப்ப தேர்ந்தெடுத்த வழி. எனக்கு ஞாபகம் வருகிறது, தூங்கி விழும் அதிகமான நேரம் தவிர்த்து, அபூர்வமாய் சில வேளை அவன், அப்புறமாய் தவிர்க்கவே முடியாத ஒருவனாய் நீ. பூச்சற்ற, எனக்கு 'வெறிச்'சென பயம் சொல்லித் தந்த என் கூட்டுச் சுவர்கள். அவற்றில் காதுகளுடன் அவர்கள். என்னிடம் இனி எப்போதும் இல்லை என் முறிவுகளுக்கான விசனங்கள். காதலுக்கான நீண்ட நெடும் காத்திருத்தல்கள். அவனது, அவன்களது பொய்கள், அல்லது பொய்களிலும் கோரமான இந்தப் பொய்களின் மௌனங்கள். உன் நேர்மையற்ற அரசியலை அடையாளங் காணும்வரை, உன்மீது பிரமிப்புற்ற தாயாய் அன்பு செலுத்தினேன். என்னுள் நீ செலுத்திய அனைத்து தவறுகளையும் பொறுத்தேன். என் செயல்களைப்போல, எனது காதல் உண்மையாய் இருந்தது (அது எப்படிப் பொய்யாக இருக்கும் ?). அத்துடன், எனது காதல் என்னுடையதாய் மாத்திரம் இருந்தது. ஆகாயம் நிரம்பி வழிகிறது பொய்களால். நீள் பாம்பு; என் துயரங்களின் போது, நான் வந்து நிற்கும் ஆபத்தான குகை; வாள் ரம்பமாய் அறுக்க அதன் கனத்த அகோர சூழ்ச்சியில் எத்தனை தடவை விழுந்திருப்பேன். காலம்காலமாய் எங்களின் புலம்பலில் எழுந்த தாய்மை, நீயும் நானும் கலந்து திரிந்த, நான் விலகி நடந்த, ஒரு எப்பம் நாளிகைகளின் எச்சமாய். குழந்தையை நீ பிணைப்புடன் தடவிக் கொண்டிருந்தபோதே, "எதை காரணமாய் வைத்தும்" யாரும் யாரையும் இழுத்து வைத்திருப்பதில்லை என உன் பழைய உடன்படிக்கை பகர்ந்து விடைபெற்றேன். ஒப்பந்தங்களுக்குள் புகுந்தொழிந்த உறவு. காதல் காமம் கலவி, "நீண்ட நாட்களாகி விட்டன, வாவன் இந்த பாம்பில் சந்திப்போம்" என சாதாரணமாய் பழசைத் தட்டிப் பேசத்தெரிந்த, பொய்களைச் சொல்லாத, உண்மையை நெருங்காத உன்னிடமிருந்து. எத்தகைய தத்துவங்களை பேசினாலும் அதிகாரம் உங்களிடம் இருக்கிறது. உன்னைப் பற்றிச் சொன்ன எல்லா ஆண்களும் உன்னைப் போல்தான் இருக்கிறார்கள். எனக்குப் புரிந்ததென்னவென்றால், *ஆண்களாய் இருப்பது அவர்களுக்கு வசதியாயிருக்கிறது. அதையிட்டு, நான் என்னை வருத்திக் கொள்ள முடியாது. உனக்காக என்னை குறைப்பிக்க முடியாது. என்னால் "அப்படி ஒருவனால் எப்படி இருக்க முடியும்" என உனது பழைய பெண்கள் போல நினைத்துவிட்டு உன்னை நம்பியபடி என் ஆன்மாவை கிழிக்கமுடியாது. என்றுமில்லாத பரவசத்துடன் மாடியிலிருந்து கீழே பார்த்தேன். அந்த மரத்தின் மீது தெருவிளக்கு வெளிச்சம். இந்த நெருக்கடி மிகுந்த நகரத்திலும் குப்பையெனத் தள்ளப்பட்டிருக்கிற அந்த அழகை நான் தீடீரென வாங்கினேன். இன்னும் கொஞ்ச நேரம் நிக்கலாம்- வேலைக்கு வெளிக்கிடுவதற்கு முன்னம். திடீரென ஓர் பாம்பு கண்ணைக் கொத்துகிறது. கண்ணீர். சதா என்னை அறுத்துக் கொண்டிருக்கும் உன் பார்வை வெட்டு. அந்த யன்னல் வழி அழகெல்லாம் திசை தவற, நான் குமுறிக் குமுறி அழுதேன். உன்னிடம் நான் திரும்பி வர முடியாது. உனது தவறுகளை தாங்கிக் கொண்டு, உன் காதலை சந்தேகித்து, கலவியில் இணையமுடியாது நிரந்தமின்மை கலக்க, "இதுக்குத்தானோ" என என்னை அலங்கரித்து, எனக்குள் உன்னை தக்க வைத்துக் கொள்ள என்னைக் கேவலப் படுத்தும் வித்தைகள் செய்து, தொடர்ந்து என் ஆன்மாவை ரணப்படுத்திக் கிழித்துக் கொண்டிருக்க முடியாது. நான் கல்நெஞ்சக் காரி என்று சொன்னாய். இருக்கலாம். நேசத்தை, காமத்தை, காதலை ஒலிப்பிக்கும் ஆண் தந்திரமயமான இந்த கீதங்களிலிருந்து நான் உன்னிடம் ஓடோடி வாராதிருப்பதே பெரும் சவால்தான். ஆனால் நான் உன்னோடு சவாலிடவில்லை. தன் பையனிடம் தந்தைபோல தாய் போட்டி போடுவதில்லை (எனக்குள்ளிருக்கும் தாய்). உனக்கு அத்தகையதொரு பிம்பம் எக்காலத்திலும் தேவையும் இல்லை. நான் மெதுவாக பின் வேகமாகி இயங்க ஆரம்பித்தேன். ஓ! எனது தனிமை, எப்போதும் நிரந்தரமானது. உன்னோடு இருந்தபோதும் அறுத்தது. இப்போது அது என்னை அப்போதாய் விரட்டாதிருப்பதே ஆறுதலாயிருக்கிறது. பாம்பு ஊரும்; பிறகு, திரும்பவும் ஊரும்; சலிக்காமல், மறுபடி மறுபடி ஊரும். அது என்னை ஏப்பம் விடவில்லை. அது நீண்டு விரிக்க, நீண்டு தெரியும் (என்) எல்லை. ~ (2001) ('சந்திப்பு: ஜனனி' புனைவின் தொடர்ச்சி. அவ் முடிக்கப்படாத புனைவிலிருந்து ஒரு கதை) *அழுத்தப்பட்டவை 'சந்திப்பு:ஜனனி' பிரதியில் வந்த வரிகள். |
Comments on "Part of an Incomplete fiction"
;-)
who wrote this?
This is pratheeba's blog; who else would write this work???