Name:
Location: DIASborough, Ontario, Canada

Born in a small town in the Northern "Ceylon", having Tamil as mother tongue, moved to the capital Colombo in 1991; then to an Occupied Land (Called "Canada" [but itz ˈkænədə in this landerz tongue) in 1995; living in Diaspora ever since. With those place changes, there is still (and I think always) a small town gurl within me, who doesn't fit in the big city images of all sort.

Powered by Blogger

Sunday, April 10, 2005

கதை 01

சோகித்த பொழுதுகளின் நிமித்தம்



''எங்க ரீயூசன் போய்ட்டே வாறியள்'' அம்மனிதர் கேட்டபோது, நீ, ''ஓம்'' என்ற
தலையசைத்தலோடு அந்த வீடியோக்கடையில் போடப்பட்டிருந்த 'நீயூ அறைவல்ஸ்' ஐ பார்க்க ஆரம்பித்திருந்தாய். அந்த மனிதரின் சுருங்கிய முகம் இன்னும் சுருங்கியபோது, ஒரு அவஸ்தை ஒழிப்பை காண நேர்ந்ததும் துடித்துப்போகிறேன் நான்.
உன் அந்தரப்படலும் கண்ணில் தெரிவித்த அப்பட்ட அந்நியமும் என்னை
நொறுங்கவைத்தது சகி. அவரின் சில மின்னல் அவஸ்தையில், அந்த மனிதர் என் முன்னால் இன்னும் சிறுத்துப்போய் நரைத்துப்போன அந்த விநாடி, எனக்குள் ஓராயிரம் பல்ப் நூர்வுகள் ஒரே சமயத்தில் நிகழ்ந்துவிட்ட சோகம்.
எனது கண்கள் நான் அனுபவித்து அழும் ஒருபொழுதுக்காய் கலங்கிவிட நான் என்னுடனான உனது 'வழமையான' நாட்களில் ஒரு நாளை நினைத்துப் பார்க்கிறேன்.
நீ ஷோபாவில் படுத்துக் கிடந்தவாறே விட்டத்தை வெறித்தபடியிருந்தாய். நான் கேட்டால் ஏதாவது ஒரு தத்துவம் உன் வாயிலிருந்து உதிருமென்றபடி ''என்ன சோகமாய் போஸ் குடுக்கிறாப்ல?'' எனக்கேட்டுவிட்டு நான் நகர்ந்துவிட்டேன் உனது விளக்கங்களை கேட்கும் பொறுமையின்றி.
நான் அப்பால் போய் எதுவும் செய்யாவிட்டாலும் நீயாய் சொல்லமட்டும் அந்த
மாபாவத்தை செய்யாது எனது நேரத்தை பாதுகாப்பதில் குறியாக நகர்வேன்.
நீ வந்து என்னோடு கதைத்தபோது, நீ நீண்டநேரமாக எனக்காக காத்திருந்து ஏமாந்து பிறகு வேறு வழியின்றி 'வலிய' என்னோடு கதைப்பதாய் எனக்குள்
மகிழ்ச்சி. உனக்கு எந்த மகிழ்ச்சியையும் தராதுவிடுவதில் என்ன சந்தோஸமோ...
எம் சந்திப்பின் பின் நான் உன்னுள் உணர்ந்த, உனக்குள் புதைந்திருந்த கனம் என்னுள் சலித்தது. கனடாவில் நீ சப்பாத்துக் கால் பதித்த மூன்று வருடங்கள். இன்னுமே முடிவுறாத உன் வலிகள் எத்தனை எச்சமாய் உனக்குள்?
உனக்குள் புதைந்திருந்த கனம் என்னுள் சலித்தது.
நான் "சரி சொல்லித் துலை'' பாவனையோடு உன்னை பார்த்தேன்.
நீ எலிவேற்றரில் கண்ட 'நம்மினத்தவர்' 'முதியவர்' பின்னிணைப்புகளோடு
ஆரம்பித்தாய். நான் ஒரு கதைகேட்கும் தொனியில் சோர, நீ, ''நான் இறங்கிறன்
அந்தயாள்...'' மனதுக்கு பிடிக்காத காட்சி நினைவில் உன் உதடு நெளிய, அருவருப்பா அசிங்கமா தெரியாத் தொனியில் நீ சொல்கிறாய்.
நான் ஒரு மூன்றாம் வகுப்பு பிள்ளைபோல, பால் சம்மந்தப்பட்ட எதுவும்
அறியா பருவக்காரியின் பாசாங்குபோல, "கி கிஸ்ட் யூ... ஏஏ......'' இன்னும் ஒரு
பலாத்காரப்படுத்தப்பட்ட பெண்ணை 'எங்கெங்கு தொட்டு..." விளக்கம் கேட்கும்
அற்பப் பதராகி மாய்ன இப்போ என்னில் எரிச்சல் வருகிறது.
என் கண் எதிரே இருக்கும் முதிய மனிதர்தான் நீ குறிப்பிட்ட 'நம்மவர்' எனப்
புரிகையிற்தான் உன் வலி என்னால் உணரப்படுகிறதே... இந்த மனிதர் உனக்கோ அல்லது எனக்கோ புதியவரல்ல. இவரோடு முதல் உரையாடத் தொடங்கியது உனது நட்புக் கரங்களும் அந்த ஓயாத வாயும்தான்.
வயது வித்யாசமற்ற அவருடனான உனது நட்பை என்னால் உன் சில
உரையாடல்களில், நாமிருவரும் நடந்து வருகையில் அவர் விசாரித்தல்களில்
உணரப்பட்டது.
நீ பலநாள் மன உளைச்சலில் உழன்று பாடசாலைக்கு ஏன் கடைகளுக்குக்கூட இறங்காத அந்த நாட்களின் பின் ஒருநாள் உன்னைக்கண்ட அவர், ''என்ன பிள்ள
கனநாளாக் காணேல்ல... சுகமாயிருக்கிறிங்களா.. எங்க படிக்கிறிங்க..'' இத்யாதி கேள்வி கேட்டு நீ மறுக்க மறுக்க ஒரு சாக்லேட் பைக்கற்றும் வாங்கித் தந்ததை நீ உன் வீட்டினரோடும் என்னோடும் பகிர, நான் என் மன 'நல்ல மனிதர்' லிஸ்ற்றில் அவரையும் சேர்த்துக்கொண்டதும் ஏனோ தோழி எனக்கு மிக அருகில் இருக்கும் இந்த மனிதர் பக்கம் பார்வை திருப்பவே இப்போ அருவருப்பாக இருக்கிறது. மன்னித்து விடு. உன் வலி எனக்குப் புரிகிறது.
நீயும் ஒன்றும் யதார்த்த நியத்திற்கு முரணென்று இல்லை. முதியவர், துணையிழந்தவர், வீடியோவில் மட்டும் பொழுது போகும். நான்கு சுவர்கட்குள்
அடக்கப்படும் 'பலவற்றுள்' சினிமா ஏற்றும் பாலியல் கிளுகிளுப்பு இப்படி எப்பவாச்சும், எலிவேற்றரில் சடுதியாய் தீர்த்தால்த்தான் என்று (வீடியோக் கடை காண் நட்புத்தானே!?)
வக்கிரம் அந்த வக்கரிப்பு சிறு பெண்ணை அவளின் விருப்புதலின்றி நெருக்கும் மனித மிருகம்..... ஐயோ அது உனக்குள் எத்தனை காயங்களை ஏற்படுத்தியிருக்கும்?
நீ உன்னைக் கிழித்து எழுப்பும் கேள்விகளை நான் எப்படி நிராகரிக்க முடியும்?
நாங்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறியபின்னொருநாள் நீ சொன்னாய்.
''மீண்டும் அவரைச் சந்தித்தபோது கோபம் வரவில்லை நான் பேசவும்
விரும்பவில்லை. நீஅவர் உணராத என் காயங்களை அவர்நீ உணர்ந்தே ஆக வேண்டும்.
அப்பாவோடு ஏன் பதட்டம்? பயப்படாதே.. நான் உன்னைக் காட்டிக்
கொடுக்கப் போவதில்லை. (அதனால் என்ன வித்யாசம் வந்துவிடப் போகிறது?)
இனிமேல் உன்னிடம் காயப்படும் சிறுசுகளுக்காக. தயவு செய்து மீண்டுமொருமுறை உன்னைக் காட்டாதே (இப்பொழுதும் நான் கவலைகொள்கிறேன் உன் தனிமைபற்றியும்
காமம் பற்றியும்.)''
நான் மௌனமாக இறந்த காலங்களில் நடக்கிறேன்.
அசட்டுப் பெண்களாக பாடசாலைவிட்டு தர்சினி அக்காவீட்டு 'விளாங்காய்' மற்றும் நாவற் பழக்கனவுகளோடு வளர்ந்த நாங்கள். எனக்குள் சிலிர்ப்பு.
நீ, ''இவங்கள் இப்படித்தானா?'' என உதடு இறுக்கி கண்கள் வலிக்க
கேட்கையில், "எல்லாரும் அப்பிடியெண்டில்ல ...சிலபேர் தெரியாதே" பதில்
தந்து உன்னை பேசவிடாதிருந்திருக்கிறேன் அல்லது ஏமாற்றியிருக்கிறேன்.
நீ, உனது குடும்பம், உனது இருண்ட குழந்தைப் பருவம் தோழி, நான்
உணர்கிறேன். இரும்பும் நெருப்பும் மிகுந்த உன் விழிகளின் அழகில் முழுதுமாய்
மயங்கிக்கொள்ள முடியாமை உனது முழிக்கறுப்பின் காரணமோ?
உனது இறந்தகாலங்களை நீ நீட்டிப்போடும்போது 'நிகழ் காலத்தில் வாழு' என்
தத்துவ விளக்கங்கள் இப்போது எனக்கே பகட்டாய்ப்படுகிறது.
றேகா.... நீ வஸந்தகாலத்தின் மாலைப் பொழுதொன்றில் கேட்ட கேள்வி என்னுள்
இன்னும் ஈரலிப்பாய்த்தான் இருகிறது.

''பெண், பெண் பிறப்பு, பெண் வாழ்க்கை, பெண் உடை, பெண் அகராதிகளிடையே செத்து, இங்கும் அதே பழமையை மாற்றிப்போட்ட புதுமையில் அல்லாடும் நான். நான் எங்கே வாழ்வது?'' ஒரு திடீர் பிரசவமான கவிதைபோல் இருக்கிறது உன் வரிகள்.

''எனது வாழ்க்கையுள் நுழைந்த எவளுமே எனக்கு வாழக்கற்றுத் தரவில்லை.
எவனுமே வாழவிடவில்லை. அன்று என் அன்னையை வதைத்தவர் கண்களிற்படும் போதெல்லாம் நான் எத்திக்கும் தப்பாது சிதறிப்போகிறேன்.
நான் நானாக வாழ எவரும் விடவில்லை. வாழ முற்படுகையில் நிறம், இனம், பால் எல்லாமே தடுக்கும் அவலம். அடக்குதலை எதிர்த்தெதிர்தே நான் பலவீனமாகி விட்டேன். என்னால் தொடர்ந்து ஒரு சராசரி மாணவியாக 'மனமொப்பி' நகரமுடியவில்லை.
கனடாவில் ''*3Ws ஐ நம்பக் கூடாது'' சொல்லும் ஆசிரியர் மீதில் எனக்கு அபிமானம் இல்லை. வெள்ளைத்தோலின் மகத்துவம் கூறும் கனேடிய வரலாறும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவம் தருவதும் தவிர இவர்களின் முன்னேற்றம் எதிலுமில்லை.
என் அன்னையின் வாழ்வியல் 'மனோதத்துவம் அறியவில்லை. ஆதலால் அவளின் மகளாகிய நான் ''மனோவியாதி''யால் மாறிப்போன என் தோலைப்போல... பல்லைப்போல நாளுக்குநாள் மாறியபடிதான்.''

நான் பேச்சை மாற்ற எண்ணி ஏதோ நகைச்சுவையை (பெண் சம்மந்தப்பட்ட)
ஐனரஞ்சகமாய் முடிக்கவும் கனம் குறைய நீ சிரித்தாய், உன் அழகு விழிகளில் அத்தனைபிரகாசம் எங்கிருந்து வந்தது றேக்? இப்போ எங்கே போயிற்று?
வானத்தின் அழகிலே நான் மோகுறும் போதெல்லாம், பச்சையாய்க்கண்ட மரங்களைமொட்டையாய்க் கண்டு நான் கலங்கிடும் போதெல்லாம் உன் உதடு பிதுங்கி சின்னதாய் சிரிக்கும்.
''என்ன அழகு?!'' என நான் உன்னோடு பகிர்ந்துகொள்கையில் 'ஓ அழகுதான்'
என்று தலையசைத்துவிட்டு அதோடு அவ்விஸயம் முடிந்துவிட்டதாய் நீ நடப்பாய்.
நானோ ஆச்சரியப்பட்டுக் கொண்டோ சிலாகித்துக்கொண்டோ வருவேன். என்னை பார்த்து நீ சிரித்துக் கொள்வாய்.
நான் ''இதென்ன சிரிப்பு.. உலகத்தில் என்ன என்பதாய் அலட்சிய சிரிப்பு'''
உன்னை கோபித்துள்ளேன்-கடிந்துள்ளேன், மனசுக்குள். இயற்கையோடு இணையும் என்மனசில் அத்தனை பிரியமெனக்கு.
புரிகிறது. வறுமையில் வாடும் மானிடக்கரங்களுக்கு சிவப்புக்கரங்கள் இரத்தம்
கொடுப்பதும், மனிதக்கரங்கள் பிராணிகள் இறப்பில் சோகித்துப்போவதுமாய் மானுடம் அழிகையில் மிருகங்கள் வளர்ப்பை இரசிக்கும் என்னைப் பார்க்கையில் உனக்கு சிரிப்போ...?
''உன்னைப்பார்க்க எனக்கு பொறாமையாயாய்க்கூட இருக்கிறது'' நீ அன்று
சொன்னாய். நான் நளினமாய் உன்னை வெட்டிக் கேட்பேன் ''ஏனோ??".
நீ காத்திருந்தாற்போல் சொல்வாய்.
''வண்ணத்துப்பூச்சியின் சிறகைப் பிய்க்கும் குழந்தைப்பருவம் குறித்து எனக்கு
விமர்சனம் உண்டு. நான் வண்ணத்துப் பூச்சியாய் பறந்த வயதில் என்னைப் பிய்த்த மானுடர் மீதென் வெறுப்பின் வீரியம் என்னென்று சொல்வேன் சியாமி.....
அம்மா.... அவளை இறுக்கிய கயிறுகள் ஞாபகம் இருக்கு. மண்ணிறமாய்
திரண்ட கயிறு. பாவம் அவள் தலை கலைந்து கதறும் போதுகளில் என்னைப்பற்றி சிந்திக்க ஆளில்லை. அப்பாவின் அம்மாவின் அழுகல் பேச்சுக்கள் 'உன் அம்மாவின் ஆக்கள்' என விளித்துக் கொல்லும்.
எனக்குள் எழுகின்ற அக்கினி அணைக்க, அணைக்க, அணைவதாய் இல்லை. என்னைப் பிய்த்தவர் பலபேர் உளர். எனக்கு மட்டுமே புரிந்த வலிகள். மாத்திரைகள் போட்டால்த்தான் உறக்கம் எனக்கு. உற்சாகமாய் இருக்கிறார்கள் வண்ணத்திக் கொலைஞர்கள்'' சொல்லிக்கொண்டே நீ போக நான் சோகித்த பொழுதாய் அதுவும் ஆயிற்று.
இன்னும் நெஞ்சுக்குள் ஞாபகமிருக்கு. நீ நான் ஜெகன் சேர்ந்து நடந்த பாதைகளில் இன்று இராணுவத்தடங்கள். ஆனால் அதற்கு முன்னமே மண் உனக்கு
அந்நியமானது தீடீரென ஒருநாள் ''எப்பிடி இருக்கிறிங்க'' என ஐரோப்பாவில் இருந்து ஒலித்த ஜெகனின் குரல்போல.
அது எல்லாம் போய்விட்டது தோழி போயேயய விட்டது. இப்போ நானும்
நீயும்தான் எச்சம். ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் போய் ஏதோ வாழ்கிறோம்.
உனக்குள் ஒரு உலகம் உன் உறக்கம் தவிர்த்து/தவிர்க்க விழித்தபடி. எனக்குள் இன்னொன்று.

என் அம்மம்மா. சொல்லப் போனால் என் அம்மம்மாவால்த்தானே நீ எனக்கு
நண்பியானாய். உன் வீட்டின் விஷயங்களை அள்ளிக்கொணர்ந்தால் சீனி மிட்டாய் வேண்ட இரண்டு பத்து சதம் (என்ன கணக்கோ) தருவதாக சொல்லி அவ காட்டின வெத்திலை பையுள் என்னை ஈர்த்த சில வெள்ளி நாணயங்கள்தானே அவள் அடித்த பந்தாய் நான் உன் வீட்டில் நுழைய ஏதுவானவை.
''றேகாவ பள்டத்துக்கு என்னோட விடுறிங்களா" எண்டபடி நான் பூனைபோல
உன் வீட்டில் நுழைந்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான்.
அம்மம்மா... அவள் தந்த பிம்பங்கள்.
நீயும் நானும் துள்ளியோடிய நாட்களுக்கு முட்டுக்கட்டையாய் எம் வாழ்வில் விதி என்னை மூலையில் இருத்தி சந்தோஷமாய் விளையாடியது.
அதற்குப் பிறகுதான் அம்மம்மாவின் ஆட்டம் (தள்ளாட்டம், வாயாட்டம், இத்யாதி)கூடி அவள் புறுபுறுக்கத் தொடங்கினாள். அவளை யார் கவனிப்பது?
இப்போ அதையெல்லாம் எண்ணி சிரிப்பு சிரிப்பாய்ச் சிரிப்போம். எங்களை அந்த
மனுஷி(?) எவ்வளவு கவனமாய் கையாண்டிருக்கிறாள் எண்ணும்போதெல்லாம் நான் 'மெய்' சிலிர்ந்து போவேன்.
அம்மம்மா நாங்கள் சைக்கிளில் மிக வேகமாய் ஏறும்போதும் ''பிள்ள...'' எனக்
கூப்பிட்டு ஏதோ சொல்ல தயங்குவாள். நாங்கள் அவளை கவனிக்காமல் செல்லும்போது அவளின் புறுபுறுத்தலை தாண்டி வீதிக்கு வந்திருப்போம்.
''எல்லாம்'' புரிபடும் வயதில் அவள்பால் பரிதாபமான அன்புதான் எமக்கு வந்து
இருந்தது.
அவள் போய்விட்டாள்.
ஓ றேக்ஸ்... நீதானே சொன்னாய் கூடப்படித்த அந்த பதினெட்டே வயது
நிரம்ப இருந்த அந்த கிரேக்கப் பெண் நிரம்பிய பின் காத்திருந்தாற்போல் தனக்குள் ஒரு உயிரை நிரப்பியபடி அடுத்த வருடம் எம் முன் ஒரு மோல்இல், வண்டிலுள்
குழந்தையொன்றைத் தள்ளியபடி, வயிற்றிலும் ஒன்றைத்தாங்கியபடி.
அவள்தான் ஒருமுறை எத்தனை அழகாகச் சொன்னாள் எம் பாடசாலை
இடைவேளை நேரம். எவ்வித சங்கடமோ சங்கோஜமோ இல்லாமல், தங்கள் கிராமத்தில் முதல் கலவியின் பின் வரும் பெண் இரத்தத் துணியை வீட்டு வேலியில் இட்டு, 'அட இவள் என் வீட்டுப்பெண் கற்புள்ளவள்' என அதன் மூலமாய் பிறர்க்கு அறிவிக்கும்வழக்கம் என. நீ சிரித்தபடியே சொன்னாயே 'அட அங்கும் அதேதததத தானா?''
நீ சொல்கையில் நானும் அவளும் எப்படி சிரித்தோம்.
ஸ்ராறா உனது தலையில் செல்லமாக குட்டினாள். நீ குறும்பாம்.
ஆப்பிரிக்ககண்டத்தில் வாய்க்குள் நுழையாத பகுதியிலிருந்து வந்த கறுத்த பெண் லீஸாகண்ணடித்தாள். அவள் அவளது அப்பாவின் இரண்டாவது தாரத்தோடு வசிக்கிறாள். ஆசிரியையாக தனது ஊருக்குப்போய் தனது ஊரை மேம்படுத்த வேண்டும் என்று சொல்லி மற்ற நண்பிகளின் சிரிப்பைச் சந்தித்து நெஞ்சை நிமிர்த்திக்கொள்வாள்.
அம்மம்மாவின் அழிவு சகாப்தத்தின் அழிவல்ல என்றே தோன்றுகின்றது.
ஆனாலும் என் பிரிய றே! உனக்கு நான் சொல்கிறேன். நம்பிக்கைகளுள்
நடப்பவையும் உண்டு நம் சந்திப்பைப்போல!
அந்த வன்னித் தெருக்களில் நாம் நடந்து திரிந்தது போல் இந்தக் கனேடிய
வீதிகளில் என்றேனும் நடப்போமென கனவேனும் கண்டிருப்போமா சொல்?
இன்று நீ நடைபிணமாய்... நம்பிக்கை தொலைத்து, போர் தந்த விரக்தி, உன்
சிறுமிப் பிராயத்துக் குடும்பச் சூழல் நசிவு என உன்னை துரத்துகையில் இங்கும் நீ
இறுக்கப்படுகிறாய். பலாத்காரமாய் 'நீ' மறுதலிக்கப்படுகிறாய்.
''இவர்கள் மனிதர்கள் இப்படித்தான் வாழ்வார்கள். நாமும் இதற்குள்தான்
வாழ்ந்தாகவேண்டும் நீ விரும்பினாலும் விரும்பாமற் போனாலும்'' என் யதார்த்தவாதம் எனக்கே ஏற்புடையதாய் இல்லாவிட்டாலும் நான் ஏற்றுக்கொண்டதாய் பாவனைப் படுத்தியபடியே சொல்லுவேன். நீ கைகளை கைவிட்டபடியே ஒரு பெருமூச்சுடன் சோர்வாய்.
அந்த கிழவரின் விழிச் சிவப்பும், பின் வாங்கலும் அடிக்கடி எனக்குள் துப்ப
வைக்கிறது. எம் பிராயத்து நண்பன் ஒருவன், ''என்ர லவ்வர் அ போலதான் மாமியும் நல்ல ஷேப்" என விபரித்தபோது ஏற்பட்ட உணர்வு ஒழுக்க ரீதியானதா என்றெல்லாம் நாங்கள் விவாதிப்போம்.
அப்போதெல்லாம் பைப்பை திறந்ததும் வீழும் நீராய் உனக்கு பக்கத்து சீற்
பையனை எட்டோ ஒன்பதோ வயதில் நீ பென்சிலால் குத்தியது ஞாபகம் வரும்.
சாராம்சங்கள் எதற்கு?

இறுதி இரவு. நீ நான் - உன் சில உண்மைகள்.
''இப்பொழுதெல்லாம் அம்மா பெரிதாக சிரித்தால் அழுதால் எனக்கு பயம் கௌவிக் கொள்கிறது. இவளை யாரும் கட்டி வைத்துவிடுவார்களோ என்று அச்சமாயிருக்கிறது.இவளைக் காவல் காக்க பிறந்தது போல் அவள் தூங்கிய போதும் தூங்காமல் உழலும் நான். இவளை முன்னிறுத்தியே என் சந்தோசங்கள் இருப்பதாய் அவள் சிரித்தால் சிரித்து, அழுதால் அழும் என் மனசு. அம்மா என்ற அவளை எவ்வளவு மட்டமா இவர்கள் சிதைத்தார்கள். இந்த உலகை பார்க்கத் தொடங்கியபோது பலவந்தமாய் என்னையும் சிதைத்தபோது, உலகை மிகக் கொடூரமாய் புரிந்து கொண்டேன். என் வயதில் யாருக்கும் கிடைக்காமல் போன அநுபவம் அந்த வயதுக்கு மீறி என்னில் விழுந்தது. அதை இறக்கி வைக்க முடியாமல் பாரமாய் இருக்கிறது. எல்லாப் பிள்ளைகளையும்போல யாருடனும் அவ்வளவாய் ஒட்டிக்கொள்ள மாட்டேன். அம்மாவைப்பற்றி கேட்டு விடுவார்களோ என்ற பயம் மௌனமாய் ஒரு மூலையில்
என்னைக் கதறடிக்கும்.''
''உன்னோடு பழகத்தொடங்கியது என் சிறிய தங்கை இறந்து பிறந்த சோகத்தின்
பின்புதான்...'' தொடர்ந்து சொல்கிறாய்.
உனக்கு ஒவ்வாத உறவினர்கள் பற்றியும் கனத்துக்கொண்டாய்.
''நான் பாடசாலை போகாத நாட்களை தங்கள் குடும்ப விஷயம்போல் என்னிடம்
விசாரிக்கும் இவர்களுக்கு மனசு பற்றி அக்கு வேறாக்கினாலும் புரியாது. காரணம் அறியாமல், ''இனியாவது ஒழுங்காய் படி'' எனும்போது எனக்குள் அத்துமீறி இவர்கள் பிரவேசம் இடிக்கிறது.
அப்பா அதை அக்கறை என்கிறார். ''இயல்பாய் சொல்வதை ஏன் பெரிது படுத்திறாய் பிள்ளை" என்கிறார். என் இயல்பு கெட்டுப் போவதைப்பற்றி புரிந்துகொள்ளாமல்.... என் தனிப்பட்ட விஷயம் என்கிறேன்.
''பள்டம் போகாதது தனிப்பட்ட விஷயமா? குடும்ப விஷயமல்லா'' என்கிறார்.
அவரை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர் குடும்பத்தை என்னில் திணிப்பதில் எவ்வித நியாயமும் இல்லை என்பது அவருக்கு புரியுதேயில்லை. உறவுகளோடு ஒத்துப்போ என்பது அவர் குணாதிசயம் என்றால் மனிதர்களோடு மட்டுமே சிரிப்பதென்ற என் குணத்தையும் அவர் உணர்ந்துகொள்ள வேண்டும்''
நீ வருத்தத்தோடு சொல்கிறாய்.
எமது சுயத்தின் திருப்திக்காக மட்டுமல்ல உறவு நெருக்கடிகளிலிருந்து விடுபடக்கூட சம்பாத்யம், கல்வி, அந்தஸ்து தனியிடம் என்பது எமக்கு நன்றாகவே மிக நன்றாகவே தெரியும். ஆதலால்த்தான் படிக்கிறோம். எங்கள் சுயத்தை இடிக்காத எந்த வேலையோ நாங்கள் தேடிக்கொள்வோம்.
இனியாவது ஒழுங்கா.... வார்த்தைகள் உனக்குத் தேவையில்லை. நோய்வந்தது. அது ஆறும்போது நாங்கள் மீண்டும் அந்த நோயிற்கு பாதகமாயின்றி அதை எதிர்க்க துணிவோம்.
நான் மௌனமாக சொல்கிறேன்.
நானும் நீயும் வாழ்வதற்கு ஏற்புடைய போதில் உன்னை நானும் என்னை நீயும்
புரிந்துகொள்ளும் சமயம் வருமெனில்... ம்... எனக்குள்ளும் சிறு மூச்சு.
இந்த பாடசாலை ஆரம்ப மாதத்தில் நீ பாடசாலைக்கு ஒரு வருட இடை-வேளைக்குப்பின் செல்லப்போகிறாய். மன உளைச்சலிலிருந்து மீண்டவாறே 'மீண்டும்' இணையப் போகிறாய்.
புதுப்பாடசாலையில் ஒவ்வொருநாளைக்கு ஒவ்வொரு உடை அணியமறக்காது
போனில் நினைவு படுத்துமாறு சிறு பிள்ளை போல வேண்டிக்கொண்டாய். அப்பத்தான் வேறு இனப் பிள்ளைகள் மதிக்குங்கள் என்று ஜோக் விட்டாய். ஆடை பற்றிய பிரக்ஞையற்று சும்மா உடலுக்கு வசதியானவற்றை நீ அணிவது என்னோடு நீ படித்த ஒரு வருடம் வரையான உன் இயல்பு.
"இவர்களுக்காக நாம் இன்னும் என்னத்தையெல்லாம் மாற்றியாவேண்டும்'' எனக்குள் எழுந்த கேள்வியை மறைத்தேன்.
''ஆண் நண்பர்கள் பிடிக்கோணும்'' என்றெல்லாம் தொடர்ந்தாய். நீயும்
இயல்பாயிருக்க எத்தனிக்கிறாய். அது எங்கே கைகூடாமல் போய்விடுமோ பயப்படுகிறேன்.
நான் அறிவேன். உன் வயது மாணவனை அதுவும் அழகாய்க் காண்கையில்
கண் விரிக்கும் வயதுப் பரவசங்கள் உன்னிடம் கிஞ்சித்தும் இல்லை. உன்னை
தொடரும் பையன்களில் நீ காட்டும் கோபம் மீண்டும் அவர்கள் உன்னை
சீண்டுவதற்கான ஒத்திகை அல்ல.
ஆனாலும் தோழி உன்னால் ஒரு ''ஆண்'' நண்பனை பிடிப்பதோ அவனுக்காக
உருகுவதோ முடியாத ஒன்று (அதை தவறென்று நான் எண்ணவில்லை!).
நீயும் இயல்பாக வேண்டும் என்பதுதான் என் விருப்பமும்.
அது எனது பிரியமான பெண் ஒருவர் சொன்னதுபோல 'கவுன்சிலிங்'
போவதால் மாத்திரமோ, உலகத்தில் இன்னும் எத்தனையோ துன்பங்கள் இருக்கு என்று எண்ணுவதால் மாத்திரமோ நிகழாது.
தடித்த புத்தகங்கள் அவர்கள் படித்தவை. எம் சம்மந்தப்பட்டவையையும் அவை
இணைத்துக்கொள்ளுமாயென்ன?
தமிழ் நடுத்தர வயது ஒருவர் தனது 3 வயது மகனுடன் தற்கொலை செய்தபின் சில கிழமைகளில் 'சூட்டோடு சூடாக' கனேடிய தமிழ் வானொலி 'ஒன்றில்' தற்கொலை செய்வது சரியா பிழையா என்று 'கலந்து' உரையாடினார்கள்.
நீ மாற 'எல்லாமுந்தான்' மாற வேண்டும். சாத்தியமா?
''புதிதாய் பிறந்ததுபோல இருக்கிறது'' என்கிறாய். அப்படியே ஆகட்டும். அது
போதும்.
இதோ என் அருகில் படுத்துக்கிடக்கிறாள் என் பிரிய சகி. கால்கள் மடக்கி
குறண்டி, ஒரு கரடு முரடான குழந்தைபோல.
உனக்காக மீண்டும் மீண்டும் மானசீகமாய் மனசு 'ஒரு' கடவுளை
வேண்டிக்கொண்டது.


நீண்ட வருடங்களின் பின்னான சந்திப்பு எவ்வித நீரோட்டமுமின்றி கலைந்தபோது, நான், ''இந்த சமர் இதத்துக்கு நன்றி'' யென உன் குடும்பத்தினருக்கு சம்பிரதாய வார்த்தைகள் கூறி கிளம்புகிறேன்.
நீயும் என்னோடு கிளம்புகையில் உனது ஆடை வழமைபோலவே உனக்கு
எடுப்பாய் இருப்பதாய் நான் தெரிவித்துக்கொள்கிறேன். நீ உனக்கு மட்டும் என்னவாம் எனவும், நான் உண்மையாவா? என உன் பொய்யை சந்தேகப்படுகிறேன் வழமைபோலவே!
நாம் பழசை மறக்கவில்லை என இருவரும் எம்மையிட்டு பெருமிதம்
கொள்கிறோம். பேசிக்கொண்டுபோகையில் எங்களைத் தாண்டும் கார்கள் சில 'ஹார்ன்' பண்ணி மகிழ்ச்சி(?) தெரிவிக்கின்றன. அது எங்களை நினைவுக்கு அடிக்கடி திருப்புகிறது.
பிடிக்காத ஒரு விடயத்தை பற்றியதாய் நம் பேச்சு ஏன் அமையவேண்டும் என
நாமிருவருமே அதை அசட்டை செய்கிறோம்.
நீ இங்கு மனிதர்கள் பார்வை என அலுப்புற்று கொண்டாய். இவர்கள் தரும்
அழுத்தம் அனைத்திலும் அதிகமென ஒரு வெள்ளை மனிதனைக் காட்டுகிறாய். ஒரு முறை நீ பஸ்ஸில் ஏறும்போது உன் இடுப்புக்கு கீழே தட்டிய வெள்ளை ஆணை நீ நினைவு கூர்ந்தாய்.
எங்கள் முன்னால் பஸ் நிற்கிறது. மிகவும் உற்சாகமாக ஏற முற்பட்ட அந்த
வெள்ளைச் சிறுவன் தாயின் கண்டிப்பான, 'லேடிஸ்ட் பெர்ஸ்ட்' (பெண்களுக்கு முதலிடம்) இல் முகம் சுருங்க முதற்படியில் வைத்த காலை பின்னிழுத்து ஒதுங்குகிறான்.
துடுக்குற்று நின்ற அவன் முகம் எமக்குள்ளும் எதிரொலிக்கிறது.
உன்னை நான் மீண்டும் பிரிந்தபோதும் வானம் அழகாய்த்தான் இருக்கிறது.
அதற்கு எல்லாக்கதையும் தன்னில்தான் முடிவதென்ற வரட்டுப் பெருமை.
அதற்கு எப்போதும்போல அதை தருவதில் எனக்கு ஆட்சேபணை இல்லையென்றாலும், உத்தேசம் இல்லை.
இன்னும் கொஞ்சக் கதை பாக்கியிருக்கிறது. அதில் 'நீ' நிம்மதி பெறுவதே
முடிவாய் இருக்கும்.
~




உயிர்நிழல் (பிரான்ஸ்) 1999

Comments on "கதை 01"

 

Anonymous Anonymous said ... (July 13, 2005 3:38 a.m.) : 

Dear,

Clarity in writing is the golden rule.Tamil may not be a refined, flexible language as English... but as a writer Ur collective duty is to refine the language.

A plot is the one which carries the story. A lot of writers underestimate the role of the plot. U may write experimental ones. but U will find all the best short stories ever written have a substancial plot. U should give importance to plot in ur future stories.
-Macondo.

 

post a comment