கிழிகிறதடி என் நாட்கள்
1. கிழிகிறதடி என் நாட்கள் மௌனப் புறாக்களாய் உனக்கு தெரியுமோ நான் யாரையும் இப்போ எதிர்ப்பதில்லை முரண்பட்டு விலகியவர்களை மனிதர்களென சேர்த்துக்கொண்டேன் உடன்பட்டு வந்தவர்களோ மனிதன்களாகவே இனியும் இருப்போம் என்பர் கிழிகிறதடி என் நாட்கள் என் மோனம் இழந்தேன் இனி நளினம் அழகு இரண்டையும் இழப்பேன் இறந்ததும் நிகழ்வதும் ஒன்றுபோல காலங்கள். நெஞ்சு மையத்துள் வெறுமை ஏதும் செய்ததாய் அன்றில் எதுவும் செய்வதாய் நினைவில் இல்லை செய்யப்போவதாய் எனக்குள் எழுகிறது சாதாரணங்களின் ஜனரஞ்சகக் கனவு அதோடு கிழிகிறதடி என் நாட்கள். 2. நான் எதைச் சாதித்தேன் எதைச் சாதிப்பேன? கால்வைத்த மனிதனை எதிர்க்கத் திராணியற்று கலைகின்றன மௌனப் புறாக்கள் பாரதியின் பாடலில் அகமகிழ்ந்து குந்த நான் என்ன பராசக்தியா? கலைகின்றன புறாக்கள் கழிகிறதடி என் காலங்கள் 3. என் உடல் செயற்படாமற்போய் சில வருடங்கள் ஆயிற்று அந்த சிலவற்றுள் சிதைந்த என் கனவு ஏக்கம் இப்போதும் கனவுகள் மீண்டும் வராத என்கின்ற ஏக்கம் மீண்டு மீண்டும் வா 4 எவனதும் பாதிப்பற்று எழுதும் ஆசை எவளைக்கேட்டாலும் பாரதி என்கிறாள் சரி அப்புறம் என்றால் இன்னொரு பாரதி யுகக்கவியாய் முளைத்தும் விடுகிறான் எவனதும் பாதிப்பற்று எழுதும் ஆசை வேராய் இருக்கிறது என்னுள் எனக்குத் தெரிந்து எவனும் அப்படி எழுதிக் கிழித்ததாய் இல்லை இங்கு எவனைப்பற்றியும் எவனுக்கும் கவலையில்லை. அவனவன் கவலையெல்லாம் அவள்களின் பாதிப்புக்கள் தாங்களாக வேண்டும் அதுவே ~ 1999 நவம்பர் உயிர்நிழல் 06 |
Comments on "கிழிகிறதடி என் நாட்கள்"
//எனக்குள் எழுகிறது
சாதாரணங்களின்
ஜனரஞ்சகக் கனவு//
இதற்குள்ளிருக்கும் கேள்விக்குறி நினைவுதெரிந்த நாளிலிருந்து உடன் வந்துகொண்டேயிருக்கிறது. ஒத்திகைகள், இருப்பை அறுக்கும் வாள்களாய்ப் போய்விட்டதைத் தவிர்க்கமுடியாமல் ஒப்புக்கொண்டு சுயபச்சாதாபங்கொண்டுகொண்டேயிருக்கிறது மனம்.
//எவனதும் பாதிப்பற்று
எழுதும் ஆசை// என்பதிலுள்ள பரபரப்பு, //எவளைக்கேட்டாலும்
பாரதி என்கிறாள்// என்பதன் தட்டைத்துவம், //எனக்குத் தெரிந்து
எவனும் அப்படி எழுதிக் கிழித்ததாய் இல்லை// என்பதன் நிர்த்தாட்சண்யம் - நல்ல கவிதை
முன்பு எழுதிய கவிதை என்பதால், கிழிகிறதடி என் நாட்கள் பலதடவை வந்திருப்பது ஏனோ பொருந்தாமல் உறுத்துகிறது. ஒருவேளை அதற்காகவேவா?
முன்பு எழுதியது என்றதாற்தான் மாண்ட்ரீஸர். 2005 இல் திரும்ப போடுகிறபோது மூன்றிடத்தில் துருத்தியபடி நின்றனவை அகற்றத்தான் கை பரபரத்தது, கீழே பிரசுரமான இடமும் போடுவதால் அது சரியா.. என்ற கேள்வியில் விட்டுவிட்டேன்.
---ஒத்திகைகள், இருப்பை அறுக்கும் வாள்களாய்ப் போய்விட்டதைத் தவிர்க்கமுடியாமல் ஒப்புக்கொண்டு சுயபச்சாதாபங்கொண்டுகொண்டேயிருக்கிறது மனம்.---
உண்மை.
அதை எதிர்த்தோ சார்ந்தோ எழுதிக்கிழித்துக்கொண்டே இருக்கிறது..