Name:
Location: DIASborough, Ontario, Canada

Born in a small town in the Northern "Ceylon", having Tamil as mother tongue, moved to the capital Colombo in 1991; then to an Occupied Land (Called "Canada" [but itz ˈkænədə in this landerz tongue) in 1995; living in Diaspora ever since. With those place changes, there is still (and I think always) a small town gurl within me, who doesn't fit in the big city images of all sort.

Powered by Blogger

Monday, April 25, 2005

கதை 02

பிரார்த்தனை




இன்று: மரங்களற்ற, காற்றே வீசாத, நிலங்கள் விறைத்து நீற் கட்டியாய் ஆகிவிட்ட ஒரு பூமியிலிருந்து, தேவனே உம்மை விசுவாசிக்கிறேன். என்னுடைய தாத்தாவிற்கு, என் நேசத்திற்குரிய அம்மாவின் அப்பருக்கு நீர் அமைதியான மரணத்தைத் தருவியும். அதற்கு, அவரது பிள்ளைகள் திரும்பிப் போகும்வரை அவரை உயிரோடு வைத்திரும்.
இன்று, எனது மிகச் சிறிய, மெல்லிய எலும்புக் கைகளால் உமக்கு ஏற்றுகிறேன் இந்த (மெழுகு) த்திரிகளை. என்னுடைய தாத்தா, பாண்டியங்குளத்தில் எனக்குள் எப்போதும் வெயிலாய் நினைவிருக்கும், நிழலற்ற முற்றத்து மாமா வீட்டில் இருக்கிறார். ஓ! என்னுடைய தாத்தா. பாண்டியங்குளம் இலங்கைப் படத்தில் எந்தப் பக்கத்தில் என்பதை நான் அறியேன். ஆனால் அங்குதான் தாத்தா இருக்கிறார். தற்சமயம், அங்கு பூச்சியும் பாம்பும் பெருகும் மாரி காலம். அவரைப் பற்றி சொன்ன கதைகளில் 'ஆறடி தாண்டிய உயரத்தில் கம்பீர ஆண்மகனாய்' இருக்கிற (தாத்தா போல ஒரு மாமாவும் இல்லை) எனது தாத்தாவை, தயவு செய்து நீர் காத்தருளும்.
அவரை அறியாத எனது தம்பிகள் அவரைப் பார்க்கவேண்டும். மூத்திரம் மணக்கும் அவரது பாயை நெருங்கி, அருகிருந்து அவர் கிக்கிளிக்கிண்ட சிரித்து, அவரோடு விளையாட வேண்டும். கையாலாகாத கனவோடு இது நிறைவேறுகையில் பூரிப்பில் மினுங்கும் அவர் முகம் நினைத்து அழுந்துகிறேன். கடந்த கோடை காலம், அவரிடம் நான் விடைபெறும்போது முகத்தைத் திருப்பிக் கொண்டார், ஒரு குழந்தையைப் போல, நினைத்ததை அடைய முடியாத ஒரு குழந்தையைப் போல... தேவனே! அவருக்கு நீர் அமைதியைத் தருவியும். அவருடைய, மிகச் சிறிய, அவரது குழந்தைகளைப் பெற்றதைத் தவிர வேறெதையும் பெறாத, மெல்லிய அந்த மனைவியையும் அமைதியாய் வைத்திரும்.
இன்னமும் திரும்பி வராத பிள்ளைகளைப் பின்னிய சிறிய கிழவியின் உள்ளிடுங்கிய கண்களிலிருந்து வழியும் அந்த மாலைப் பொழுதுகளின் நீர் ஐயோ அது வற்றிவிடக் கூடாதா. பாக்கை பாக்குரலில் போட்டு இடித்தபடி தாத்தாவை தூற்றியபடி அவ கொட்டுகிற ஒப்பாரி இன்னமும் பேய் வீட்டில் உலவுவதுபோல மனமெல்லாம் விரவுகிறது. நான் பாவி. எனது அனுமதியற்று, என் விருப்பத்திற்கப்பால் இங்கே ஆரம்பித்துவிட்ட இன்னொரு வாழ்க்கையை விட்டு, சாவு மட்டும் ஏனும் அங்கே அவர்களோடு இருக்க முடியாதுபோன பாவி. துயர் நிறைந்த கனவுகள் காணும் அம்மாவைத் தொற்றிய குற்ற உணர்ச்சியோடு, இந்த இரவில் உமக்கொரு மெழுகுதிரியை மட்டும் கொழுத்திவிட்டு, நானிங்கு எரிகிறேன். இந்த இரவு, தாத்தாவின் கைகளைப் பிடித்தபடி, அவரது முதுமையில், அவருக்கு அருகில் இருந்து -அவருக்காக- “நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்” என சொல்ல முடியாத குற்ற உணர்ச்சி கொல்கிறது.
என்னிடமோ மதம் இல்லை. அவ்வாறெனில், இந்த குற்ற உணர்ச்சியை நான் எப்படிக் கரைப்பது. எனது கோயில்கள் கூட்டமாய் இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்ப்பதும் போவதும்... நான் உவ்விடமே உம்மைப் பார்த்து குந்தி இருக்கிறேன். பழக்கயீனத்தில், எனது முழங்கால்கள் வலிக்கவில்லை. உம்மை முழுமனதுடன்தான் விசுவாசிக்கிறேன். தம் பட்டுக் கைகளை ஒன்றுமில்லை என விரித்துக் காட்டும் குழந்தையைப்போல; தருவதற்கு தன்னிடம் எதுவுமேயில்லாத ஒரு குழந்தையைப் போல... என் கைளை உம்முன் விரிக்கிறேன். நம்புவதற்கு மதத்தைத் தராத குடும்பத்திலிருந்து உம்மிடம் மன்றாடுகிறேன். நீர் நிறைவேறாத எம் கனவுகளை விட்டுவிடும். ஆனால் தேவதைகளையும் அதிர்ஸ்டங்களையும் எமக்குத் தாரும்.
அப்பாவுக்கு, அந்த அதிர்ஷ்ட இலாபச் சீட்டை விழச் செய்யும். மறுபடியும் அம்மாவின் ஊருக்குப் போகலாம். தாத்தாவோடு குந்தி இருந்து, மீசை வைத்திலிங்கத்தைப் பற்றி, அவரை இவர் கொன்றதான கதைகளைப் பற்றி, பறையலாம். பழி குறித்த எந்த பயமும் இன்றி, மேலே காட்டி, உண்மை அவனுக்குத் தெரியுந்தானே...” என்கிற கிழவனை, அவருடைய கரம் பற்றி நாம் நடந்த கதைகளை விசனமற்று, குற்ற உணர்ச்சியற்று எனது குழந்தைகளுக்குச் சொல்லலாம். எல்லாம் வல்லவர் நீர், ஆதலால் அற்புதங்களைச் செய்யும் தேவனே.
உயிர் கொல்லும் நோய்களை நீர் குணமாக்கிறீர். உம்மால், கால் நடக்க முடியாதவர்கள் எல்லாம் எழுந்து நடக்கிறார்கள். கதவு தட்டி வரும் சாட்சிகளோ, சகல துன்பங்களினதும் நிவாரணி நீர் என்கிறார்கள்! கேள்விகளற்று உம்மை நம்பினால் புனித பரதீஸில் அனுமதி இலவசம் என்கிறார்கள். ஆதலால், எயிட்ஸ், புற்றுநோய் என எடுத்தியம்பி, உம்முடைய அற்புதங்களை நான் சந்தேகிக்கேன் தேவனே. (தவிர, எயிட்ஸ் நோயாளர்கள் எல்லோருமே ஒழுக்கம் தவறியவர்கள் என நீரும் மாயை கொண்டிருக்கலாம், உம் தவறில்லை.) - ஆனால்
நான் மிகவும் ஒழுக்கமானவள் தேவனே. புகைத்தல், மது (திராட்சை ரசம்கூட) மற்றும் நீர் ஒத்துக்கொள்ளாத மைதுனங்களைக் கைவிட்டேன். உம்முடைய இராச்சியத்தின் சகல எதிர்பார்ப்புகளையும் கடைப்பிடிக்கிறேன். நான் உம்மை தவிர்ந்த உருவங்களையும் விக்கிரங்களையும் துதிப்பதும் விட்டேன். இதற்குப் பிறகும் என்ன செய்து உம்மை ஈர்ப்பது. நான் ஒரு பரம்பரை விசுவாசி இல்லையே. என் அறியாமையின் முன் என்னை மன்னியும் பிதாவே. “வெளிச்சத்தைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கான இரட்சிப்பு” அது எனக்கில்லையா. இன்னமும் ஏன் ஆன்மா இருண்டிருக்கிறது?
நாங்கள் போயிருந்த மாதம் தாத்தா குழம்பி இருந்தார். அவருக்கு எண்பத்தைந்து வயதாகிவிட்டது. அம்மாவின் சீதனக் காணிகளை அவளது பெயருக்கே எழுதும்படி இரவுகளில் தூக்கத்தில் எ(ழு)ம்பிக் கத்தினார். அந்தக் காணிகளை நீரே எடுத்துக் கொள்ளும். எங்கோ வெகு தொலைவில் வன்னிக் காடுகளுள் இருக்கக் கூடிய அவற்றை நீரே வைத்துக் கொள்ளும். குளிர் பிரதேசத்து காற்றோ, உயிரைத் தின்னும் விறைப்போ அற்ற அங்கு, வெயில் கறுத்த, மிகவும் உபச்சாரம் மிக்க அந்த மக்களோடு போய் ஷேபமாய் நீர் இரும். அதற்கீடாய், என்னைக் கவனியும்.
எட்டொன்பது வயதில் நானும் அக்காவும் எம் வீட்டுப் பின் காணியில் இப்போதுதான் ஒடுகிறோம். அம்மம்மா வீடு எனக்கு; எங்கட வீடு அவளுக்கு. உளுந்து விதைச்சிருக்கு. சந்திரன்மாமா வந்து போகிறார். இயக்கத்து மாமாக்கள் ஒவ்வொருவராய் திரும்பாது போகிறார்கள்; சில்வா மாமாவை மறக்கவே முடியவில்லை.
தேவனே இன்றோ பின் காணி வரண்டிருக்கிறது. காணிக்குள் பனை வடலிகள் முளைக்கின்றன. அம்மாவிற்கு முந்திய காலத்திலேயே பெரிதாக இருந்திருக்கக்கூடிய சிவத்தப் பூ மரம் வெட்டப்பட்டுவிட்டது. பக்கத்து வீட்டுக் காரர்கள் வேலியை சில அடி தள்ளி முன் நட்டுவிட்டார்கள். நாங்கள் வரவே மாட்டோம் என்ற அவர்கள் நம்பிக்கையை மீறி வரத்தான் செய்தோம். இன்னமும் 'ஹோலிங் அப்பா ஹோலிங் அப்பா' என்றுவிட்டு தேவா மாமா மரங்களிடை இருந்து வெளிப்படுகிறார். பிறகு, அவரது உதடுகள் பாடும் அந்தப் பாடல்: ''...வேப்பமர நிழலிலே... வைத்தியரோ பாயிலே காவல் காத்த ஐயனாரும் களவு போனாரே...''
மதங்கள் தெரியாது நாங்கள் வளர்ந்த வீடு. அது உம்மை அச்சுறுத்திற்றெனின் மன்னியும் பிதாவே. உண்மையான மனிதர்கள் வாழ்ந்த தடங்கள் மட்டுமே தங்கிய வீடு. எனக்கு, செருப்புப் போடாமல் பாதம் ரெண்டும் வெடிப்பு; இரவெல்லாம் சொறி. வீடோ எந்தக் கோபத்தையும் பாராட்டாமல் மீண்டும் தாழ்வுணர்ச்சிகள் நிறைந்த தனது குழந்தையை தாலாட்டிற்று. அம்மாவின் ஏணைப் பாடல்: "உள்ளிப் பொதியோடு வந்தீரோ தம்பி, உள்ளி மலை நாடு கண்டீரோ தம்பி” வீடெங்கும் நிறைந்திற்று.
எது துயரம்? 'பதினோரு' பிள்ளை பெற்று, இரண்டை வளர்க்கவும் செய்த தாத்தா வாசற்படியில் ஈ மொய்க்க குந்தி இருந்தார். அந்தப் பெரிய வீட்டில் அவர்கள் மட்டும் தனியே. பட அறை சன்னல் திறந்து, தெரிந்த வெளியில் உதட்டைக் கடித்தபடி அழுதேன். என் குழந்தைக் கால்களால் நான் நடந்து திரிந்த மண். ஆயுதங்கள் நிறைந்திருந்த அந்த அறை...
இந்த வேதனைகளை தேவனே நான் யாரிடம் சொல்வது. நட்பற்ற முகங்களுக்குள் புதைந்துகொண்டிருக்கும் எமது மாணவர் பிராயத்திடமா. இந் நாட்டோடு ஒட்டமுடியாது எங்களது எதிர்காலத்திற்காக, எல்லையற்ற -வீடு திரும்பாத- குற்ற உணர்ச்சியோடு, வருடங்களூடே விரக்தியை நகர்த்திக் கொண்டிருக்கும் எனது பிதாவிடமா. அல்லது கொஞ்சம் கொஞ்சமாய் புதிய கலாச்சாரத்துள் கலந்து கொள்ளும் முனைப்பில் விலகிக் கொண்டிருக்கும் எனது தம்பிகளிடமா.
நானும் அக்காவும், எனது தாத்தாவின், அம்மாவின், அப்பப்பாவின் அழகிய பூமியில் தேவதைகளாய் இருந்திருப்போம். எங்களது மச்சான்கள் நிறைந்த தன்னம்பிக்கை நிறைந்து, சாவிலும்கூட வாழ்ந்துதான் இருப்போம்.
இங்கே நான் பிச்சைக்கார நாட்டின் பிரஜை என எனது விஞ்ஞான ஆசிரியையால் ஞாபகப் படுத்தப் படுகிறேன். தேவனே நான் ஒரு மிருகத்தைப்போல -நாகரிகமற்றவள் என்பதாய்- பார்க்கப் படுகிறேன், தானாய் இருக்க முடியாது போய்விட்ட ஒரு வீட்டு மிருகத்தைப்போல... நான் ஒரு காட்டுமிராண்டித்தனமான கலாச்சாரவாதி என சொல்லப்படுகிறேன். ஈவிரக்கமற்ற தீவிரவாத இனமாய் அணுகப் படுகிறேன். என்னை நிலைநிறுத்த, எனக்காய் வாதாட, இங்கு ஏதொன்றும் இல்லையே.
இந்த குளிர் நிறைந்த நாட்டில், குளிர் நிறைந்த மனிதர்களுள் எம் எந்த உருவமும் சரியாயில்லை. எனது இனத் தலைமுடிக்கு செம்பட்டை, சிவப்பு, மண் நிறம் என்பவில் இன்னமும் சரியாய் நிறம் வாய்க்கவில்லை. எந்த திரவத்தில் முடி அழகாய் நீளமாய் நிற்கும்? எந்த கட்டியில் முகம் பளபளப்பாய்ப் பருவற்று மினுங்கும்? எந்த மேற்பூச்சு கறுப்பை வெள்ளையாக்கும்? தேவனே நீர் சொல்லுகிறீர், உம்முடைய குழந்தைகள் சகலருமே உம்முன் சமமென்று. வாரும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாங்கிய சிலுவையிலிருந்து வந்து, வாழ்ந்துபாரும் ஒருக்கால். பின் சொல்லும்: வறுமை-செழிப்பு, கறுப்பு-வெள்ளை, கட்டையாய் நெட்டையாய் ஆணெனப் பெண்ணென வேறுபாடுகள் உடன் தானே எமை நீர் படைத்தீர்.
இந்த வேறுபாடுகள் எல்லாம் மாறும் எனவே நானும் விரும்புகிறேன். ஆனால் தேவனே, இங்கே, இந்த எனது காலத்தில், நான் அச்சத்தால் தினம் சாகிறேன். எப்போது எந்த சிறுவன் என்னைத் துப்பாக்கியால் சுடுவான் என்றும், எப்போது எனது சிறுமி உடல் எலும்பாய் கண்டு பிடிக்கப்படும் என்றும், எப்போது நான் தொடர்மாடியின் உச்சத்திலிருந்து விழுவேன் என்றும், எனக்கு சொல்ல முடியாதிருக்கிறது. நான் ஒரு குழந்தையை ஈன்று, அதை, இந்த பூமியில் இந்த வன்முறையுள், மனித உணர்ச்சிகளே மரத்த சூழலில், எப்படி வளர்ப்பேன் என்றும் எனக்குத் தெரியவில்லை. இரவுகளில், தங்கை வீடு வராத இரவுகளில் என் மனமோ பெண்டாளர்களையும், சடுதியில் எவனுக்கோ விறைத்துவிட்ட குறியையும் எண்ணி எண்ணி துயருறுதல்; எனது தம்பிகளில் சிறுவத்தை துஸ்பிரயோகம் செய்யக் கூடிய பெரியவன்களை நினைத்து பயமுறுதல் (அவர்கள் ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் இவர்களில் எவராகவும் கூடும்) இவையே வழக்கமாகி விட்டது. தேவனே நீர் என்னைத் தூற்றும், என் சுயநலத்தை விடுமாறு கூற்றும்.
முடியவில்லை தேவனே. என்னுடைய குரலை எழுப்ப முடியாத சூழலில், எல்லோருடையதும்போல, செழுமை மிகுந்த எனது வரலாற்றைச் சொல்ல உந்தப் படுகிறேன். எனது விஞ்ஞான ஆசிரியைக்கு. அற்பமென பார்த்து அகலும் சக மாணவர்களுக்கு. வேறு இனத்தவரைப்போல இருக்க முனையும் எனது சகோதாரர்களுக்கு. காற்சட்டையை இழுத்து இடுப்பிற்குக் கீழே விட்டு, இழுத்து இழுத்து கறுப்பினத்தவரைப் போல நடந்து, அவர்களோடு இணைய விரும்பும் எனது இனத்தின் பேரழகு மிகுந்த தம்பிக்கு, அவனுடைய நண்பர்களுக்கு. தேவனே என்னுடைய வரலாற்றை -எனக்கே சொல்லப்படாத ஒரு மெய்க் கதையை- எப்படி நான் சொல்லுவேன்?
நான் யுத்தத்தால் பிடுங்கப்பட்டேன். இன்று எனக்குரிய நாடு எதென்று எனக்குத் தெரியவில்லை. என் வேர்களிலிருந்து பிடுங்கப்பட்டதை என்னால் ஒருநாளும் கடந்து போக முடியவில்லை.
நகரத்தில் நான் ஒரு விலகிக் கொண்ட சீவனாய் இருக்கிறேன். புகழ், சுயமோகம் இவற்றை விரும்பாதவளாக இருக்க முனைகிறேன். போலியான நன்னடத்தையும் தன்னடக்கமும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் தேவனே அகங்காரமும் திமிரும், வெறுப்பும் காயமும் என்னை துக்கத்துக்குரியவளாக்குகின்றன. இந்த அசிங்கமான உலகத்தில் எனது ஆன்மா ஏன் இன்னமும் அசைந்துகொண்டிருக்கிறதோ... வாழ்க்கையின் மூலாதாரமென உலகமே நம்புகிற ஒரு வாரிசை எனது காதலனிற்கு/துணைவனிற்கு பெற்றுக் கொடுக்க விரும்பாத நான், ஏன் தேவனே இன்னமும் பாவிகளில் ஒருத்தியாய் கலந்து கொண்டிருக்கிறேன். தேவனே நீரும் நான் ஒரு கன்னி என்பதால் மேரிக்கு தந்ததுபோல ஒரு குழந்தையை எனக்கும் தாராதீர். அவனது திருடனாய் உருமாற்றம் ஒரு சொடுக்கில் நிகழ்ந்திரும், அங்ஙனம் என்னை நீர் மேலும் மேலும் பாவியாக்காதீர்.
ஜோதி ஜ்வாலித்து எரிய, அதில் பெருங் கூட்டமாய் கலக்கும் ஜனங்கள். நானும் கலந்து, உமக்காய் மஞ்சள் நிற மெழுகுதிரிகளை கொளுத்துகிறேன்.
எனது குழந்தைகளைக் காப்பாற்றும். மனஉளைச்சலுள் அழிந்துவிடாது, நெடுங் காலம் துடிப்பும் இலட்சியங்களும் கொண்டிருந்த எனது தந்தையாரைக் காப்பாற்றும். இந்த தொலைக்காட்சி வலையுள் இருந்தும், வியாபாரிகளின் பிரச்சாரங்களிலிருந்தும், வேகமாய் இராட்சசன்களைப்போல உருமாறிவிட்ட வாகனங்களிலிருந்தும் -அப்பாவைப்போல அழகும் நேர்மையும் மிகுந்த- எனது குழந்தைகளைக் காப்பாற்றும். தேவனே என் அம்மாவிற்காய் அவரது அப்பாவிற்கு நீர் அமைதியைத் தாரும். அதற்கு அவரை உயிருடன் வைத்திரும்.
தேவனே... உம் மதத் தளம் தடைசெய்ததுபோல எனது தம்பிகள் ஓரினச் சேர்க்கையாளர்களாய் ஆவதில் இருக்காது எனக்கு வருத்தம். அவர்கள் எமது குடும்பத்தின் அடுத்த தலைமுறையை செய்யும் இயந்திரங்களாக வேண்டாம், அவர்கள் பெண்களை வசியம் செய்யும் வஞ்சகர்களாக, பெண்டாளர்களாக இல்லாமல் இருக்கட்டும். ஓரினச்சேர்க்கையாளர்கள்போல மென்மையானவர்களாய், அவர்கள் அன்பு மிகுந்த இனிய மனிதர்களாய் இருக்கட்டும் தேவனே.
இதற்காகவெல்லாம், உம்மிடம் தருவதற்காய், இன்றிரவு தேவனே, என்னிடம் எதுவும் இல்லை. என் கருவறையில் பலியிட ஒரு கருவும் இல்லை. நான் எல்லாவற்றையும் தியாகம் செய்கிறேன்; தியாகத்தின் பெருமை கூட வேண்டாம். வன்னியில், தொப்புள் அடியில் சேர்ட்டின் இரு நுனிகளையும் முடிப்புப் போட்டுவிட்டு, பட்டின்களைப் பூட்டாமல், தன் தாத்தாவைப்போல ஒரு நடை நடந்து கொண்டிருக்கும் “கந்தனை” அவனது அரிசிப் பற்களின் சிரிப்பை, அவன்போல நானும் அக்காவும் நடந்த தெருக்களை... தேவனே என்னைப் பார்க்க விடும். வீட்டு வேலிகளிற்கு இப்போது மறைப்பும் இல்லை. நான் அங்கு நின்ற ஆடி ஆவணியில் மழை உம் இல்லை. படயறை சன்னலில் ஏறி நின்று, அக்காவும் நானும் பாடிய மழையே மழையே போ! போ! போ! வெயிலே வெயிலே வா! வா! வா!” வை மாற்றிப் பாடியும் இல்லை.
அன்று: மழை ஏன் வரவில்லை தேவனே. தன்ர காணிக்குள்ள வந்திற்றென்பதால் மோகனண்ணா நஞ்சு வைத்துக் கொன்ற "வள்ளி” மான்குட்டிக்குப் பிறகு வந்த இன்னொரு மான் குட்டி, விறாந்தைக்குள்ள நின்று இரண்டு பக்க சுவரிலையும் ஓடி முட்டி முட்டி தன்ர கட்ட அவிட்டு விடச்சொல்லி செத்திச்சே... அதுபோல, மரணத்தை ஒப்பான வெறி பிடித்த மகிழ்வுடன் நான் கோடிப்புறம், முற்றம், கிணத்தடி எல்லாம் ஓடி ஓடி உயிர் கொடுத்திருப்பேனே, ஏன் மழை வரவில்லை? அதால், தண்ணியற்று விளைச்சல் குறைஞ்ச வயலெல்லாம் செழிச்சிருக்கும். புல்லுக்கும் நெல்லுக்கும் வித்தியாசம் தெரியாத நானும் பொழுது வெளித்து நூரும் கிறக்கத்தில் என் காதலை நினைத்தபடி படுத்திருப்பேன் ஆனால் அங்கு மழை இல்லை...
இங்கோ மழை பெய்யும் நாளெல்லாம் தனிமை. நகரத்தில் நொடிக்கொருதரம் அம்புலன்ஸ்களின் அலறுதல். அதன் ஒலி காற்றில் கலையும்வரை, ஒரு சிறுவனோ, கனவு நிரம்பிய பதின் பருவக்காரியோ, வீடு திரும்பாத அகதிக் கிழவனோ, ஒரு நொடிதான், அதில் முடிந்துபோன ஒரு வாழ்க்கையை தொடர்கிறது மனம். அன்பும் காதலும் அனுபவிக்கப்படாத இந்த வேதனைகளிலிருந்து என்னை விடுவியும். இந்த அச்சங்களிலிருந்து. இந்த நிராதரவுகளிலிருந்து. இந்தக் கண்களிலிருந்து விடுவியும்.
அதற்கு, உம்முடைய ராச்சியத்தை இன்பம் மட்டுமே பொங்கும் அந்த பரதீஸை நீர் வெகு சீக்கிரத்தில் உண்டு பண்ணும்.
ஆமென்.
~



(டிசம்பர்/2002,
இறுதித் திருத்தம் மே/2003)

Comments on "கதை 02"

 

Blogger Thangamani said ... (April 25, 2005 5:17 a.m.) : 

//நானும் அக்காவும், எனது தாத்தாவின், அம்மாவின், அப்பப்பாவின் அழகிய பூமியில் தேவதைகளாய் இருந்திருப்போம். எங்களது மச்சான்கள் நிறைந்த தன்னம்பிக்கை நிறைந்து, சாவிலும்கூட வாழ்ந்துதான் இருப்போம்//

நன்றாக எழுதுகிறீர்கள்.
:)

 

Anonymous Anonymous said ... (April 25, 2005 10:25 a.m.) : 

கலக்கிட்டீங்க...

 

Blogger deep said ... (May 08, 2005 11:27 p.m.) : 

thanks guys!

 

post a comment