கதை 04
ஒவ்வொரு நாளினதும் இறுதி வரி - எதிரொலி இடம்: என்னை எப்பேர்ப்பட்ட இடத்தில் சிறை வைத்திருக்கிறாய். அரண்களோ திடமான இரும்புக் கேடயங்களோ அற்றும் ஸ்திரமான. எனக்குக் கூடத் தெரியவில்லை உன் ஒலியை வாங்கி எப்படி நான் சிறு அறைக்குள் நகர்ந்தேனென. ஒன்பது அறைகளா எல்லாமாய்ச் சேர்த்து, ஒன்றுள்தானே என்னை சிறை வைத்திருக்கிறாய். நான் விரும்பியதெல்லாம் மஞ்சள் கனலுள் கருகிய கறுப்புத் தணல். நீ காட்டியதோ சிவப்புச் சூரியன். காதல் (அப்படி அழைக்கலாமா அதை?) பரபரப்படைய உந்தும்போது, அறிவு ஊறுமாம்; தெரியவில்லை. செயலிழந்த மூளை, முகத்தின் திட்டமிடப்படா உறுப்புகள் மற்றும் மெல்லிய தசைகள் சலிக்க, உடல் களைக்கிறது. நீயே சகலதும் எனச் சொல்வது பொய், நீ என் அன்பின் மொத்தம். உடல், உயிர் என்பதுடன் ஆன்மா, நோவும் முதுகுகள், மெலிந்த கழுத்து. உடன் என் மெல்லிய விரல்கள், சிறுத்த கண்கள், சொரசொரப்பான தோல், அழுத்தி மூடிய உதடுகள், அதிகரித்து அல்லது மறைந்து வரும் பருக்கள், இவை மீறி எழும்பும் வயதின் பூரிப்புகளை மாத்திரம் தொடரும் உனக்கு என்பற்றின புரிதல்களின் ஆழமின்மைகளை அறிவேன். சித்திரை மாதம். மாதங்களில் அழகானதல்லவா ஏப்ரல், அதுவும் இங்கே முக்கியம் என்பதால் அழகெனப் புனைகிறேனோ என்னமோ. இமைகள் தாழ்கின்றன, அதிகம் சோர்ந்தும் போகின்றன. உடல், மார்புள், மர்மங்களுள் நோவெடுக்கிறது; நோகிறது. உன் ஒலிப்பில் அவை பூரிப்படைந்த தென்னவோ உடலியலின்படி உண்மைதான். ஏதோ தயக்கம். இந்தச் சிறைக்குள் வாழ்நாளெல்லாம் நசுங்குவேன் எனவொரு சோர்வு. உன் சிறைக்குள் கிடக்காத அன்றுகளில் எனக்கென்றொரு உலகம் உருவாக்கி, வியூகம் அமைத்து, வாழ்வதற்கு எதிரான குரல்களை வெட்டிவிட்டு எழ முனைந்து கொண்டிருந்தேன். தோல்விகளும் சாய்வுகளுமாய் சமனமற்றுத் தொடர்கையில், புதிதாய் உன் குரல். அப்பாவழி உறவுக்காரரின், உனக்குப் பிடிக்கா கூட்டத்தில் ஒருவனின் ஒலிகளின் சேர்வையாய்... சாதாரணமாய் ஆனால்... என்னை உன்பால் அது இழுத்துவிட வில்லை, என்னை நோகப் பண்ணிய நொடியின் இழுப்பு வரை. அது ஓர் ஆனி முடிவு. ஆடி பிறக்க இருக்க, அந்த ரோசாக்களை அழுத்தமான சிவப்பில் பிரியங்கள் கிளர்ந்து நெகிழ பரிசளிக்கிறாய். வாசல்கள், சாளரங்கள், வீதிகள், புல்வெளிகள், மழை. ஈரமும் காதலும், இசையும் மோகமும் உண்மை என்று சொன்னாய். 'என்றென்றைக்குமாய்' 'இறுதிவரை' 'என்றென்றும்' என வார்த்தை பாடச் சொன்னாய். பூரிப்பின் கிளர்த்தல்கள், பயங்கள், என் பாலிற்குரிய அந்த தயக்கங்கள்... நான் மீளவே இல்லை (இன்னும்). சொட்டச் சொட்டக் காதல் வெறுத்துவிட்டது. உன்னை எப்படி அழைப்பது? உன் பெயரில் ன் எடுத்து 'ர' போட்டு இழுத்து, கண்ணா, அன்பே இப்படி எப்படியோ. வார்த்தைகளை வெறுத்தேன். உன்னை வெறுமனே காதலிப்பது எவ்வளவு அர்த்தமற்றது. நீயெனக்கொரு கனவு, நீயெனக்கொரு உண்மை, நீயெனக்கொரு வாழ்தல். ஆனால் கம்பிகளின் இரும்பு என் உடலுக்குத்தான் தேவைப்படுகிறது. நான், பிறந்த நாள், என் இடம் - பொருள் - ஏவல் மறந்தே விடுகிறேன். நீ உணர்வாயா, நான் என்றொரு கனவு, நானென்றொரு உண்மை, நானென்றொரு வாழ்தல் உன்னால் தொடப்படாமல் கிடப்பில் கிடப்பதை. பச்சை மரங்கள், புற்கள் - பூண்டுகள், செடிகள் - கொடிகள், பூக்கள், மகிழ்வுகள் எதிர் மறையாய் வறுமை, வக்கிரம், சின்னத்தனங்கள், பிற்போக்குகள் இவற்றூடே, என் மார்புகளை நீ வருடிக்கொள்ளுபோது பயணம் எவ்வளவு இதமாக இருக்கும்... இயந்திரமாகிவிடும் வாழ்க்கை. 'அது அழகானது' அடிக்கடி சொல்வாயா நீ. ம். உயிர் விட்டு சூடிய நேசம் பொய்த்து ஈர்ப்பற்று வில்லங்கமாய்த் தொடர்வது கொடுமை. எனக்கிருக்கும் நம்பிக்கை உச்சம் என்றால், எனக்கிருக்கும் பயம் அதை காலடியில் போட்டு மிதித்தே கொன்று விடும். அதை சொல்ல வேண்டும் உனக்கு: நம்மைப்போல காதலர்களின் கதை. நாம் பேசி மயக்கமுற்றதுபோல அவர்களும் காதல் செய்தார்கள். 'என்றென்றைக்குமாய்' என கடிதம் எழுதி முத்தம் இட்டு ஒட்டினார்கள். இன்று வாரிசுகள் கண்டு தொடரும் வாழ்க்கையில், சமைத்தல் உண்ணல் தவிர, இதமாய் வார்த்தைகள் அற்று எங்குபோய் ஒளிந்துள்ளது அந்தக் காதல்? சின்னச் சின்ன சந்தோஷங்களையும் விட்டுக் கொடுக்காது கௌரவம் பேசும் காதலா அவர்கள் வார்த்தை கட்டி, பயிரிட்டு குடும்பங் கொள்ள 'எங்கட காதல் வேற' எனக் கொண்டாடியது? என் கொடிய சிறைக் காவலனே! இங்கு வாழ்தலுக்கான போரிடல், அந்நியமாதலில் அல்ல, இயந்திரமாதலில் என்கிறேன். கேள்: ஒரு வெட்டரிவாள், விரிந்த ஆங்கில யூ அல்லது சரிந்த சீ எழுத்துப் போல, அறுவடை நெல்லு வெட்டும் அருவிக் கத்தி போல குத்திட்டு நிற்க, அதற்குள் அவள் அடங்கி விடுகிறாள். வெட்டரிவாளின் வளைவுக்குள் அவளது கழுத்து. இரத்தம் சொட்டுகிறது. ‘சுகமில்லாமற் போகும்’ போதிருக்கும் கறுத்தக் கலவையற்ற இரத்தச்ச்ச் சிவப்பு. உடம்பும் அதற்குள்தான் ஆனால் அசைய விருப்பமில்லை - அது ஒரு குரூரமான இன்பமாய். கழுத்தை நிமிர்த்தினால் தலை வெட்டரிவாளின் நுனியில் மோதும், சரி என நன்றாக கீழே உட்கார்ந்தால் அதன் ஆரம்பம் அவளது தொடைகளை, பிறப்புறுப்புகளை இல்லாதொழித்துவிடும், அவ்வ்வ்வளவு கூர்மை. அவன் ஒலி: இரவிற்தான் அவள் எனக்குத் தேவையாக மித மிஞ்சிய அழகுடன் இருப்பாள். பகல் குறைப்பிக்கும் முக அழகைக் கூட்டும் இரவின் குளிர் சீண்டலில் அவள் அழ ஆரம்பிப்பாள். "இந்த உலகத்திலிருந்து விடுதலை வேண்டாம், முன் ஐன்னலை நெருக்கமாய்ப் பார்க்கும்படியாய் செய்" என உளறுவாள், ஏன் நான் களைத்துத் தூங்கிப் பாதி விழிக்கும் இராக்களிற் கூட, கண்ணீர் விறைப்பூட்டும். எதுவும் செய்வேனென வாக்குகளை வீசுவேன். அவள் அவற்றை நம்பினாள். இறுதிவரைக்கும் நான் உணர்ந்ததெல்லாம் ‘மீளமீள வீதிக் குமிழ் விளக்கில் மோதி வீழும் விட்டில்கள் போல’ அவளால் நம்ப மட்டுமே முடியும் என்பதே. நகர, அதுவும் 2 bed-room apartment ஐத் தாண்டி ஒரு அடியும் எடுத்து வைக்க முடியாதென்பதுவும். முக்கியமாக, அவ் ஜன்னல் வீட்டில், வேலை செல்லும் பிள்ளைகளை உடைய கிழவர் இருப்பதை இவளால் என்றுமே அடையாளங் கண்டு, அறிந்து கொள்ள முடியாதென்பதும். கொட்டிக் கொண்டிருக்கும் முடி குறைந்து, நூற்பந்தாய் சாம்பல் நிறமாய் வெள்ளை வரைந்த பின்பும், இவள் என்னுடன் இருப்பாள்; இரவுகளை சுலபமாக்குவாள். எதிரொலி: அந்த வரி இறுதியில்தான் துளைக்க ஆரம்பிக்கும். சொல்லப் போனால் ஒவ்வொரு துளிர்வின், மலர்வின் பின் எழும் ஓலம் அது. அதை கட்டச் கடசியில் விட்டு விட்டு, முன் கட்டிடத்தில் ஒளிர்ந்திருக்கும் ஒரு பிரத்தியேகமான யன்னலில், சுழல்வின் சாய்வில் கண் செருகுவாள். அங்கே அவளைப் போலொரு ஜீவன், அவளைப் பார்த்தபடி, அவளைப் போலவே. கண்டிருக்கிறாள், அதை ஆணாக்கிக் கிளுகிளுப்பாய் உணர்ந்திருக்கிறாள். இல்லாமல் இருக்கக் கூடும், சிறு தள்ளாட்டம் இருந்தது ஒருமுறை நிழலில். ஆனால் அவளைப் போலவேதான்... பூமரங்கள் தொங்கும் அவ் மாடி யன்னல், நீர் ஊற்றும் கரங்களின் நிழல் நன்கு பரிச்சயமான ஆன்மாவுடையதே. அதில் தன் நிலையைத் தேடும், தனிமையை உதைக்கும் உந்தல். மெல்ல மெல்ல கசியுமிந்த மாலை, சிறு கிளர்ச்சியை, காமத்தை, சமயத்தில் சிலிர்ப்பைக் கொன்று விழுங்கியபடி ஆணாய் முன்னேறுகிறது உடலில். ஒரே சுவாரசியமும், பயனும் அந்த முன்வீட்டு ஒளிர்தல் மாலை வடிய வடிய கூர்ந்து, நெருக்கத்தை தருவதுதான். அலங்கரித்துக் கொண்டு நின்றால் அவன் பார்ப்பது போல்... இங்கே இவளது இரசித்தல்கள், முனகல்கள், இளகல்கள் அங்கொரு 'அவனிலிருந்து'தான் வந்தாக வேண்டும். விறாந்தையில் ஷோபா, சுவர்ப் படங்கள், பச்சை, கண்ணாடி விம்பங்கள் வர்ணங்கள் எவையும் பேசுவதில்லை, "என்ன சாப்பிட்டியா, என்ன களைப்பா இருக்கா..." போன்ற வசனங்களை. உடலின் இணைவில் எழுப்பப்படும் பாசாங்கான திரவ ஊற்றுக்கள் திண்மமாய் இங்குதான் உருமாறின. ஆரம்பத்தில் முதன்முதலாய் கொணர்ந்து வைத்தபோது அவ்விடங்களில் அந்தப் பொருட்கள் எவ்வாறெல்லாம் ஒளிர்ந்தன. ஒளி: முன் மாடியில் நிழல் அசைவுகள்... அவளின் வருகைகூட இவ்விடத்துக்கு சூட்டையும் மணத்தையும் வழங்கின நீண்ட வருடங்களுக்கு முன்பு. இசையும், உயிரும், முன் ஒளிர்தலும் தவிர, தண்ணீரின், தாவரங்களின் மொழி தான் பிறகெல்லாம் துணை வந்தன. "தாவரங்களுடன் பேசாதே மனிதர்களோடு பேசுசு" உரக்கக் கத்தியபோதும் உணர்வதில்லை. "கொஞ்சி, ஊடி, முத்தமிடு ஒருமுறை. உண்மையாய், இயந்திர இயங்கல் தவிர்த்து" என்பதை எவை கேட்கும்? சுகமில்லாதபோது, கவனத்துக்கு ஏங்கும் சிறுகாலப் பொழுதில், அம்மா "ஊத்தி" வரும் இஞ்சிப் பிளேன்ரீயாய், முலை காம்புறிஞ்சும் குழந்தையின் நிறைவு தரும் ஆனந்தமாய், காதலை அடையும் ஏக்கம் வாழ்வில் தனிமையில் இறுகும். அன்றோ கொடுப்பதற்கு எதுவுமில்லை. இறுதி நேர விடைபெறல். உணர்த்த அவளுக்கு திடம் மறுக்கப்பட்டு. அருகிருந்திருந்தால் உணர்த்தியிருக்கலாம் (சிலவேளை?). என்றுமே கொண்டு அலைய அவ் ஆழ் முத்தத்தை, அடித்து வீழ்த்துகையில் தன்னம்பிக்கை தரும் விதமாய் இட்டே இருக்கலாம் ஒரேமுறை. மனசு அடிபட்டு ஓய பழசு அதையே சுற்றும். தாவி வரும் குழந்தை காண்கையில் உள் உறங்கும் அந் நாட்கள் புடைக்கும். மாத விலக்கொன்றில் உடல் ஸ்பரிசம் இச்சையின்றி கிட்டுமென்றால் எதையும் தூசியாக்கி சிறு தட்டலில் ஒழிந்தேவிடும் நெருடும் இடறல்கள். அதுவே மென்வடுக்களை, கவனிக்க ஏங்குதலை இட்டு நிரப்புமென்றால். எதிர்பார்ப்பதுபோல நடப்பதில்லை, பருத்தோ சிறுத்தோ போகும் உடலையும் மனசையும் தவிர வேறொன்றும்... மாலை வந்துபோகும். விடியல்களும், கூடவே நாட்களும். சொற்ப நேரத்து, சப்பற்ற ஓட்டத்தில் 'வாழ்க்கை, வாழ்தல்' மறுக்கப்பட்டதை உணர்ந்த 'ஏன்' இன் அரும்புதலில், வேகமாய் வரும். வெறியுடன் வாழ்ந்துவிட - வெகுதூரம் ஓடி, என்றுமே தீராத காமத்தையும் வென்றுவிடும் தாகம். ஓடும் பாதணி அணிந்து, பருத்தி ரீ-சேர்ட் உம் காற்சட்டையும் போட்டு, இந்த கட்டிடத்திலிருந்து இறங்கி நடைபாதையில் ஓடவேண்டும். பையனை கொண்டு செல்லும் பாடசாலை, அத்தியாவதிய-அவசர பொருட்கள் வாங்கும் கடைத் தெரு தாண்டி தூரவாய்... நெடுந்தூரம் களைக்கக் களைக்க. ஆகாயவெளி, மனித நடை பாதை. அவள். அவள் மட்டுமே. கரை வீடுகள். சைக்கிள். ஆசைகள், இச்சைகள் பின்னிய முகங்கள் சுவர்களிடை பேதலிக்க உள்ளூர சைக்கிள் உழக்கிற்று. இருபுறமும் மனைகள் நிரம்பிய அந்த சிற்றொழுங்கையில் ஊன்றி உழக்கவேண்டும். உடம்புள் போடப்பட்டிருக்கும் உள்ளாடை வயிற்றை அமத்தவில்லை. பருத்தியில் முன்னால் சிப் போடக்கூடிய அதிலும் இறுக்காத ஆனால் அதிகம் ஆடவிடாத வசதியான உள்ளாடை. மிதிக்கிறாள். கழுத்துக்கு சற்றுக் குறைவான மயிர்கள் பறக்கின்றன. அவை இருப்பதே தெரியவில்லை-பஞ்சு போல. காற்று; மிதிக்கிறாள். காற்றின் விசை மிதிக்க மிதிக்க கூடுகிறது. நீர். நீந்த, ஓசையடித்து கடலில் கால் நனைய விரும்புறாள். கார்... ஒட்டுகிறாள் திறந்துவிடப்பட்ட கண்ணாடியூடே காற்று. எதிர்த்திசை. முடி முன்னால் பறக்கிறது. உடம்பும் பறக்க விரும்புகிறது. லாவகமாய் ஓட்டுகிறாள். இதமாய் தன்னம்பிக்கை தருகிறது. பிறிதொரு ஓசையில் திரும்ப முன் மாடி ஒளிர்தல். இறுதியில் அங்குதான் வரவேண்டி என நினைவுறுத்த, அவன். மனிதர்களைக் காண வேண்டும். ஐரோப்பியக் கடற்கரையில், ஆசியாவில், சீனப் பெருஞ் சுவர் தாண்டி காத்திருக்கும் அவனை மீட்க, அல்லது முன் மாடி அவனையாவது காண, மனம் மீறிப் பரக்கிறது. (நிறம், சாதி, வர்க்கம் என பலவாறாய் பல்வேறாய் பிரிவுபட்டுக் கிடக்கும் லோகாயத சமுதாயத்தில் ஒரு பெண்ணின் இருப்பு அடங்கியிருக்கிறது அதிகம் வெள்ளை அல்லது வெவ்வேறு நிறங்கள் அடிக்கப்பட்ட சுவர்களுக்குள். பெண்ணின் தனிமை கட்டி வைத்திருக்கும் அவளுடைய சிந்தனை பரப்பு, அதிகார மூளைகளை கழுவும்வரை இந்த லோகத்தில் எந்த ஆணும் சந்தோஷமாயிருத்தல் சாத்தியமில்லை; நிகழ்ந்தால் அங்கே உண்மையான விடுதலை இல்லை) அதைப் படித்துவிட்டு சின்னதாய் ஒரு நகையுடன் தான் உருவாக்கிய உருவத்திடம் அந்த வீட்டின் மென்வெளிச்சம் தன்னை செயலிழக்கப் பண்ணும் விந்தையை முறையிட்டாள். அவன்: நன்றாகச் சாப்பிடுகிறான், நொட்டைகள் பிடிக்கிறான், தூங்குகிறான், இழுத்து இழுத்து. நிச்சயமாக சந்தோஷமாக இல்லைத்தான், அவனுக்கு அது தேவையும் இல்லை. ஆதலால் மற்றவர்களின் சந்தோஷமென்பது அவனுக்கு இனி எப்போதும் அவசியமற்றதொன்றாக... அன்று, அவளை அடித்து ‘நீ நான் குறிப்பிட்ட கோட்டுக்குள் குடும்பம் நடத்து, பிள்ளைகளைக் கவனி, சமை, படு’ என்றவன், எதிர்த்தபோது உன்னால் வேறென்ன செய்ய இயலும் என்றவன் அப்பால்... அப்பால்... வெகுதூரம் தாண்டி அகன்ற தோள், உயரம், மீசை, உடம்பு என அடையாளங்கள் கொண்டவன் (அகராதி). ஆம், அவைக்காகத்தான் அவனை நேசித்தாள். எங்கிருந்து ஆரம்பிக்கிறது அது. அவளுக்குப் பிடித்தமான திரை நாயகன்கள் தந்த கணவன் பிம்பங்களில். இயந்திரமாகிவிட்ட வாழ்தல் என்கிற இழுத்தலில், துள்ளி மயங்கி ஆட கிளுகிளுப்பான மனசு. கோபிகைகளில் ஒருத்தியாய் கானத்தில் கரைந்து, அது குரலில், ஒலியில், எழுத்தில், கவிதையில், அவனின் அசைவில், உதட்டில், சிரிப்பில் விரவிக் கிடக்க விரகித் தவித்தாள். இசை பரவி சுவர்களில் மோதிக் கிறக்கும். ...உயிர்ப் பெண்ணே.. உனக்காக உயிரும் தருவேன். உடல் தழுவி உலகம் மறந்து வா காதல் செய்வோம்... இறுதி தாபத்துக்கு அலை போல அவள் உயிர் எழும்பும். காற்றில் கீதங்கள், இசை. தனித்திருக்கும்போது, அவை கேட்டு, இன்னொரு கோபிகையாய் மயங்குவதும், மார்புக்குக் குவட்டுக்குள் காதல் பொங்கிப் பொங்கி வருவதும், இயலா, தனி, வெறு 'மை' களைத் துணைக்கழைக்கும். அப் பாடலின், ஒரு கிளர்வின், அவ் உணர்ச்சியின் உந்தலின் ஓய்வில், பாடிய பெண்ணைச் சுற்றி காட்சி படிமங்கள் சூழும் 'பாவம்' என. ''பாடல்கள் ஏமாற்றுவது கூடப் பறவாயில்லை'' எனும் அப்பட்டம் காலம் கட(ல)ந்து அனுபவமாகும். ஆனால் உருகிய கணங்களை எப்படி மறுதலிக்க இயலும்? காதல்! மனிதன் மறக்க விரும்பாத பக்கம். மனிதன் யார், இன்னொரு அவன்தானே... குழந்தை பிரியனுக்கு ஈராறு வயது. ஆம்பிளைப் பயல், அச்சில் அப்பனைப்போல. ஏனோ இவனோடு பல்க்கனி உரையாடல்கள் கூடுவதுபோல, நெருக்கம் என்பது கைகூடவில்லை. அந்தக் காலங்களில் 'அவனின்' விந்தில், வாரிசு உரித்து என எத்தனை அர்த்தங்களை கனவுகளில் கட்டியவன் இந்தக் குழந்தை. அவனுக்குப் பெற்றே போட்டுவிட வேண்டும் ஒரு சூரியக் குஞ்சை என (சூரியன்தான் எத்தனை வீச்சுக்களும், சூடும், கிளர்வும் உடையவன்!) இன்ப அவஸ்தைகளை இவ் உடலுள் போட்டு இறுக்கிய இவன் லேசுபட்டவனா... இப்போது 'அவனின்' பிரதி என்பதாலேயே ஒட்ட மறுத்து, என்ன ஒரு துயரம்! "தூரப் பார் ராசா, வானம் இல்ல. ஆனா இருப்பதுபோல ஒரு பிரம்மை..." "வானம் அப்பா போல... எனம்மா?" (சிலவேளை அவன் அப்பனை மாதிரி பேச மாட்டான்!) "ம்... பல்லாயிரம் மைல்களுக்கப்பால் -அதை எண்ணமுடியாது- எனக்கும் எண்ணிக்கை தெரியாது. அங்கு மனிதர்கள் போல உயிரனங்கள் இருக்கின்றன..." "ஆங் றொபோட் அம்மா... "...இல்லையடா கிரகங்களில் உயிரினங்கள்" அவனுக்கு றொபோட் என்பது மிகுந்த சிலிர்ப்பை ஊட்டுதாய். "இன்னும் சில காலம் போனதும் பூமியிலும் றொபோட் வரும்" "றொபோட்டை செலுத்தும் பவர் எனக்கும் வருமா அம்மா?" "என்னைச் செலுத்திக் கொண்டிருக்கும் அப்பாவிடம் கேள், நான் றொபோட் போல சொல்வதை செய்யும் இயந்திரம். நீ செலுத்தப் போகும் உன் மனைவியிடம் கேள் இயந்திரங்களின் துயரம்" அவள் அழ ஆரம்பித்தாள். வழமையானபோதும் பையன் பயந்தான். "அவளை... முன் மாடியில் இருப்பவனையாவது பார்க்குமாறு சொல்" குரல் பருக்க ஒலியில் பேரொலி.... இத்தனை கடுமையாய், இதை ஏன் வாழ்தல் என்று சொல்ல வேண்டும்? கட்டில், தலையணைகள், போர்வைகள், மேசை, கதிரை, நேற்றிரவின் நீர்க் கோலங்கள், தரை, வெளிக் குளிர், சுவர்கள். பேசாத தாவரங்கள், பேசாத தளபாடங்கள், பாத்திரங்கள், நீர் சுவர்கள். மலம், சலம் அவையின் கூடம், தூசிகள், குப்பைகள், சுவர்கள். தொலைக் காட்சி-பேசி சுவர்கள். இவை தாண்டினால், பல்க்கனி புறாக்கள்... விழி நோக்கு மட்டும் விழுந்து கிடக்கும் கட்டிடங்கள், தார் வீதிகள், வாகனங்கள், வீதிக் கார்கள்... திசைகள் எங்கும் குழுமிக் குரல்கள் கொல்லும்: திராணியற்று மொழி மடியும்: அவ் வரி அவளுக்குள்ளிருந்து வெளி வரும், கட்டச் கடைசியாய்... இவைகள் என்னை எப்படி வலித்தன என்பது உனக்குத் தெரியுமா, இவைகள் என்னை எப்படி வலித்தன என்பது உனக்குத் தெரியுமா, இவைகள் என்னை எப்படி வலித்தன என்பது உனக்குத் தெரியுமா, இவைகள் என்னை எப்படி வலித்தன என்பது உனக்குத் தெரியுமா, இவைகள் என்னை எப்படி வலித்தன என்பது உனக்குத் தெரியுமா... ~ (2000) படம் நன்றி: பெயரிலி, காலம் இதழ் 24, ஜீன் 2005 |
Comments on "கதை 04"
'இவைகள் என்னை எப்படி வலித்தன என்பது உனக்குத் தெரியுமா'