குழந்தைகளின் கரங்களைப் பிடித்தபடி...
![]() ...சும்மா வேடிக்கைக்காக இப்போதும் குழந்தைத்தனமான கேள்விகளைக் கேட்கிறேன். இந்தக் குழந்தை அவ்வளவாக மாறிவிடவில்லை... காட்டுப் பூனை தன் உடல்நலத்திற்குத் தேவையான தாவரத்தையும், தன் இன்பத்திற்கான பெண் பூனையையும் தானே தேடிக் கொள்கிறது. எனக்கு மகிழ்வளிக்கும் தாவரத்தை நான் நகரத்தின் தெருக்களில் கண்டு பிடித்தேன். என் குழந்தைப் பருவத்தின் கண்ணீர் இன்னமும் என்னிடம் இருக்கிறது. அதன் சிரிப்பையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். அதன் ஆனந்தமான ரகசியங்களையும் கூட. -ழாக் ப்ரெவெர், "சொற்கள்" (க்ரியா 2000) வர்ணங்களில்... தம்பிக்கு மெல்லிய பிங்க்-இல் ஒரு பிரஸ் (இதுவும் என் பிறேஸ்லெற்-றும் மச் பண்ணும்!) வாங்கியபோது நான் வர்ணங்களைப் பற்றிக் கற்றுக் கொண்டேன். வர்ணங்களுக்கும் எனக்குமான வரலாறு கிட்டத்தட்ட 18 அல்லது மேலே. தம்பியின் முகம் போன போக்கிற்கும் எனக்கும் இடைவெளி 6. வர்ணங்களைப் பற்றி சொல்லத் தொடங்கி நான் எண்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பத்து ஒன்பது வயதுகளில் எனக்கு பிடித்த நிறம் நீலம் -எல்லோரையும்போல எத்தின பேருக்கு நீலம் பிடிக்குமெண்டிறதில ஒரு சந்தோஷம்- உலகமே நீலமென. எனக்குப் பிடித்த இன்னொரு நிறமான சிவப்பை நான் மறைத்து வைத்திருந்தேன், ஏனெனில் அப்போது நான் படித்த பத்திரிகையில் அதென்றால் காமம் என எழுதியிருக்க பயந்து விட்டேன் (எவ்வளவு பயங்கரமான சொல் அது). அறியாமல் அறிந்து கொண்டதின் (ம்...ம்...) படி, எனக்கு கறுப்பு பிடிக்கும் என்று என் நண்பர்களை வைத்து தோன்றுகிறது. எனது 7, 8, 9, 10 ம் வகுப்புகளில் எல்லாம் எனக்குப் பிடித்த பெண்கள் கறுப்பு. அவர்களின் சிரிப்பு, பற்கள், முடி, உயரம், மென்மை, கண்கள் இவையெல்லாம் பற்றி நான் தனித் தனியாய் பேசுவேன், அவ்வளவு மேன்மை. இத்தனைக்குப் பின்பும் அவனுக்குப் பிடித்த நிறம், பச்சை என அவனது பெயரை வைத்து சொல்கிறேன். இப்போது நான் வேறொன்றையும் பேசப் போவதில்லை (மூச்!). நிறங்களில் வரலாறு. நிறங்களில் அழகு. நிறங்களில் உணர்வுகள். பச்சை, செழுமை, கருணை வெள்ளை, மென்மை, அமைதி சிவப்பு, உயர்வு, புரட்சி கறுப்பு, இருமை, துயரம் 12: 02 மத்யானம் நவம்பர் 21, 00 நான், ஊடறுத்து ஓடி குழந்தைகளுக்கு நிறங்களைப் பிரிப்பது தவறு என்றேன். பச்சையில் இச்சையும், வெள்ளையில் காமமும், சிவப்பில் குரூரமும், கறுப்பில் இதமும் ஒளிந்திருப்பதாய் சொன்னேன். நிறங்கள் பொதுவான பிம்பங்கள் மாத்திரமே என விளக்கினேன். குழந்தைகளிடம், அந்த நிறங்களுக்கு நீங்கள் புது அர்த்தங்களைக் கண்டு பிடியுங்கள் என்றேன். உற்சாகமாக அவர்கள் பச்சை- ஆதிக்கம் (அந்தச் சிறுவனின் அம்மாவிற்கு பிடித்த நிறம்!) வெள்ளை- உலகத்தில் அழுக்கானதும் தன்னைப் புனிதப் படுத்துகிறதுமான திமிர் பிடித்த நிறம் (வெள்ளை உடை போட்டால் விளையாட முடியாது) சிவப்பு- கவர்ச்சி, கனவு, மகிழ்ச்சி (பல நினைவுறுக்க முடியா வசந்தங்களின் குறியீடு) -இரத்தம், துயரம், போர், கண்ணீர் (போரை வெறுக்கிற, போரின் தேவையை உணர்ந்த, போரால் துயருறுகிறவர்கள்) கறுப்பு- ஈர்ப்பு, ஆளுமை ஆனால் பாவம், இத்தனை திறமைகளுடன் தனித்த நிறம் (கல்யாண வீட்டுக்கு கறுத்த சல்வார் போட முடியாது) என நான் எதிர்பாராத புது தரத்தினை ஒவ்வொரு நிறங்களுக்கும் தந்துவிட்டிந்தார்கள். இவ்வாறாய் அவர்களுக்குள் ஒளிந்திருப்பது கற்பனை. அது கடலைப் போலவும் அலையைப் போலவும் நுரையைப் போலவும் பல வடிவங்கள் எடுத்தும், பெற்றோர்களால் -அதுவும் "போய்ப் படி" என்பதையே சுலோகமாய்க் கொண்ட எம் குடும்ப அமைப்புகளில்- கவனிக்கப் படாமல் கிடக்கிறது. ஆம், எம் ஒவ்வொரு குடும்பமும், பல பெண்களை, ஒரு ஓவியனை, ஓர் இசைக் கலைஞனை, ஓர் கலகக் காரனை, அவற்றின் பெண் பால்களை குரூரமான அதன் கோட்பாட்டின் கீழ் முடக்கியே விட்டது. ~ (2000) படம் |
Comments on "குழந்தைகளின் கரங்களைப் பிடித்தபடி..."
..piraku,
naan avalai santhiththen..
janani.