(1)என் பிரியத்துக்குரிய சத்யன், வானமுமற்ற கானமுமற்ற கவிதையும் தராத ஒரு இரவில் உனக்கெழுதத் தொடங்குகிறேன். அப்போது நீ உருண்டையான, எல்லோரும் நேசிக்கிற தொக்கையான குழந்தையாக இருந்தாய். உனது சிரிப்பும், அழகும் கவர்ச்சியும் கண்களின் உண்மையும் கன்னங்களின் பளபளப்பும், ஆனந்தங்களை அள்ளி வீசின. அவை புகைப்படங்களில் கொஞ்சம் தங்கி, மீதி காற்றிலும் அதன் வீச்சிலும் மறைய, என் பிரியத்துக்குரிய சத்யன் நீ இப்போது அதிகம் தனிமையில் இருக்கிறாய். நான் கவனிக்கிறேன். நீண்ட அலைச்சலுள் சிக்கி, நல்ல ஒரு அக்காவாய் நான் உனக்கு இல்லாமல் போகும் இந்த காலம். அப்படி இருக்க வேண்டும் என்பதல்ல, அதுவும் வாழ்தலின் ஒருநிலை என்பதை மறுத்து நகரும் ஒரு தன்வயப்பட்ட உலகில், எனது நேசங்களை அறிவிக்கும் இக் கடிதங்களும் உனக்குக் கிடைக்காமற் போகும் என்பது ஓரத்தில் கரிக்கிறது. மொழியும், இந் நூற்றாண்டில் மங்கிய தொடர்பாடல்களும் (communication) எம்மைப் பிரித்துப் போட, என் கண்மணி! இயந்திரங்களுடன் உன் வளர்இளம் பருவம் துண்டாடப்பட எங்கேயோ வாழும் உன்னைப்போல சிறுவன் அல்லது -ஆண்கள் விளையாட்டு- என உன்னால் ஒதுக்கப்பட்ட சிறுமி, இதைப் படிப்பாள்-ன் என்கிற திருப்தியுடன் எழுதிக் கொண்டிருக்கிறேன், நிகஇடுக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் இறுதி நம்பிக்கைகளோடு. உனக்கு ஆஸ்மா. அப்பாவின் அம்மா, உன் அப்பம்மாவிற்கும் அது இருக்கிறது. அதில் உனக்கு கஸ்ரமிருக்கிறதோ எனக் கேள்வி வருகிறது. எல்லாச் சிறுவர்களும் போல ஓடிவிட்டு, பின் தனியனாய் களைத்துப் போய் நீ நிற்பாயோ என நினைக்க வருத்தமாயிருக்கிறது (இப்போது செரியாய் மெலிந்தும் விட்டாய்). உன்னை நெருங்கி வருட எத்தனிக்கும் என் கரங்கள், பரிதாபத்தை விரும்பா உன் சுயநம்பிக்கைகளை அது உடைத்துவிடுமோ எனப் பயப்படுகிறது. அதனால், அருகிருந்தே தொலைதூரம்போல உனது உலகத்தில் இணைய முடியாதது என்னை வருத்துகிறது. உனது ஆஸ்மா உன்னை சலுகைகள் கேட்கச் சொல்லுமோ என்பது சற்று நெருடுகிறது. நீ சீக்கிரம் வளர்ந்துவிட்டாயானால் சேகுவேரா பற்றி உனக்குச் சொல்லித் தருவேன். மருத்துவன், குதிரை வீரன், மனிதன் என அவனது வல்லமைகளைக் கூறி -அவனுக்கும் ஆஸ்மா- என உன்னைத் தொடர்பு படுத்துவேன். அப்போது நீ, உன்னை, உனக்குள் இருக்கும் உன்னை, ஒரு ஓவியனை, தேடல் மிகுந்தவனை, இரசிகனை, உற்சாகம் நிரம்பிய இதயத்தை கண்டு கொள்வாய். அந்தக் காலங்களில் -என் கடந்த காலங்கள் போல- நல்ல நண்பர்களையும் மனிதர்களையும் தேடி நீயும் களைப்பாய். ஏனெனில் நீயும் என்னைப் போன்றவன். அடர்த்தியான கனவுகளுக்குரியவன். அடே, அந்தரங்கமும் மானசீகமும், நீயும் நானும் உணரும் ஒரு தொடுப்பும் பிரியமும் போல்தான் என்பதைப் புரிய, உனக்கும் என்னைப்போல நேரங்கள் எடுக்கவோ, என்னைப்போல நீ காயப் படவோ கூடாது எனப் பரக்கிறது மனசு, இன்னும் இரத்தம் சொட்டும் வடுக்களுடன். எனக்கு உன்னைப் பிடிக்கும். உன் இயலாமைகளுக்காக அல்ல. உன்னால் இயலக்கூடியவைகளை நீ இழந்துவிடுவாயோ என்கிற பயம் காரணமாய். அடா! உன் அடர்ந்த இமைகளில், பரந்த கண்களில் இருக்கும் கலைஞன் எவ்வளவு உயர்ந்தவன் என என் மனம் அவாவும். நீ பஞ்சிப் படுகிறாய் என யாரும் சொன்னால் கலைஞன் அவ்வாறென உனக்காக நான் வக்காலத்து வாங்குவேன். ஆனால் உனக்கு அவற்றை மறைத்து வைப்பேன். நீ இன்று, நாசா பற்றி கேட்டாய். சந்திரனை அடைய எத்தனை ஆண்டுகள் எடுக்கும் எனக் கேட்டாய். நான் நான்கு வருடங்கள் என்று என்போக்கில் சொல்ல, ஒரு வருடம் இல்லையா திருப்பிக் கேட்டாய். நான் எனக்குத் தெரியாது என ஒத்துக் கொண்டேன். என்னிடம் இப்போ உன்னோடு ஈகோ இல்லை, -எனக்கு எல்லாம் தெரியும்- என்கிற உன்னிடமிருந்து என்னைப் பிரிக்கும் ஜாலமோ, உன்னுடன் வாதம் செய்யும் பெரியவர்புத்தியோ இல்லை. நான் உன்னோடு நகர்ந்து, கூட இருந்து, கனவுகள், கதைகள் பேச தயாராய் இருக்கிறேன். நீ என் தலையில் ஏறிக் குந்திவிடுவாய் என அம்மா சொல்வதையோ, குட்டி நாய்க்கும் குழந்தைப் பிள்ளைக்கும்... என வார்த்தையாடவோ, எனக்கு உன்னிடம் சில கொம்பு முளைக்கவோ நடந்திட மாட்டேன், வேணுமானால் செல்லத்துக்காய் அவ்வாறு சொல்லுவேன். நீ தேடல்கள் மிகுந்த பிரஜையாய் மனிதர்களிடமிருந்து விலகாமல், அவர்களின் அறியாமைகளுக்காக சிரித்துக்கொண்டே நகர பாடம் சொல்லுவேன். எனது அனுபவங்களை உனக்குக் குத்தாமல் சொல்வேன். --அப்பவே சொன்னன்தானே- என்கிற வஜனத்தை நான் காற்றில் பறக்க விட்டு விட்டு, புதிதாய்க் கேட்பதுபோல, நான் எதிர்பார்க்காததே நிகழ்ந்ததுபோல உனது அனுபவங்களை புதிதாய் வாங்குவேன். உனது மகிழ்ச்சியையும், துடிப்பையும் கண்களில் மிளிரும் கிளர்வையும் நானும் மீள அனுபவிப்பேன். இந்தக் காலத்தியில் எப்படியோ, நீ யறியாமலே என் ஸ்நேகிதனாய், குழந்தையாய், சகோதரனாய் இருப்பாய். மனதளவில் தொலை தூரத்திலிருந்து உன்னோடு நான் பேசப் போகும் இக் கடிதங்கள், உன்னையும் என்னையும் இந்த நூற்றாண்டையும் இணைக்கப் போகும் புள்ளியில், நாங்கள் இன்றில்லாத அளவு அதிகப்படி ஸ்நேகிதத்துடன் அன்று சிரித்துக் கொள்ள வேண்டும்.
~ 12: 10 இரவு யனவரி 30, 00 1(2).நீ நல்லாய் சொக்கர் (soccer) விளையாடுவாய். பந்தை உதைகையில், அப்படியே இவ் வுலகம் மீதான ஏமாற்றங்களை எட்டி உதைப்பதாய் எண்ணுகிறாயா. எதை எண்ணி உதைப்பாய் என்பதை எனக்குக் கூறு. நானும் என் காயங்களுக்குரியவர்கள் மீதென் விசனங்களைப் பகிர்வேன். எமது கடும் காலங்களை மறக்க, இசையும் விளையாட்டும் பகிர்தலுமே எந்த காலத்திலும் சிறந்ததென நாம் கற்போம். உங்களை நினைக்க வருத்தமாயிருக்கிறதடா. ஒருநாள் இன்ரனற் போக, எத்தனை தடவை, எத்தனை பேரை இறைஞ்ச வேண்டியிருக்கிறது. உங்களுக்காக பெரியவர்கள் சலுகைகள் செய்தால்தான் உண்டு. அக்கா காதலனுடன் கதைத்து முடிய, அப்பாவின் போன் உம் கதைத்து முடிய, உனது நேரம் போதுமாய் இல்லை. ~11: 57 இரவு பெப்ரவரி 3, 01(3).நேற்று நீ washroom உள் இருந்து அழுதாய், play stationn வேணுமென்று. பிறகு நீ அம்மாவோடு அதற்காய் சமரசம் செய்ய வெளிக்கிடையில் (காலம கட்டில ஒழுங்கா விரிச்சிட்டு school போவன்!), நான் சிரித்தேன். அப்போது நீயும் என்னோடு இணைந்தவாறே சொன்னாய் அந்த game மூலம் உன் spelling, grammar, reading எல்லாம் பலப்படும் என (கதை விட்டாய்). நான் உன்னிடம் கேட்டேன், அதில் நீ கற்கக்கூடியது -சுடு, கெதியாய்ச் சுடு, சுடு! சுடு! சுடு!- தான் எனவும் வெட்கத்துடன் முரண்டினாய். உனக்குத் தெரியும், அது உண்மையென்று. ஒத்துக் கொள்ள முடியாது அது அறிவுபூர்வமானது என என்னை நம்ப வைக்க முடியாதென்றும் தெரிந்து நீ அம்மா பக்கம் திரும்பினாய். உனது சிந்தனையை சிதைக்கும் அவற்றிடமிருந்து உன்னை விலக்கி வைப்பது, உன் நண்பர்கள் குழாமில் உன்னைத் தனிக்கப் பண்ணுமே என்ற சிந்தனையுடன் நான் உனக்காக சிந்திக்கையில். அம்மா போராடும் மனிதர்பற்றியும், world vision இல் காணும் அந்த வறுமை முகங்களையும் உனக்கு சொல்கிறா. அப்போ நீ, சே! அதுகளால என்னால நான் விரும்பினத பெற ஏலாம இருக்கு- என நினைத்து விடுவாயோ என்று பயந்தேன். ஆனால் நீ வீடில்லாதவர்கள் பற்றின கட்டுரையைப் படித்தவாறே என்னிடம் புரியாத சொல்லுக்கு அர்த்தம் கேட்டாய் (எனக்கும் தெரியாது!). நான் அசடு வழிந்து கொண்டிருந்தபோது, எனக்கும் உனக்கும் உலகத்துக்குமான பரிவர்த்தனை அத்தனை சிக்கல்களையும் அவிழ்த்தெறிந்து விடும் என்று தோன்றிற்று. இரவில், படுக்கையில் அக்கா உன்னைப் பற்றியே கவலைப் பட்டாள். அடா, நீ போக்கிமான் உருவங்களைக் கீறி உன் தனித்தன்மையை இழந்துவிடுவாயோ எனப் பயப்பட்டேன் நான். எனக்கு எனது கவலை. அகில உலகத்தையே உன் வசீகரக் கண்கள் இழுத்துவிடும் என்கிற பேரானந்தம். சீக்கிரமாய் உனக்கு வயசாகட்டும். நானும் நீயும் மறுக்கப்பட்ட உரிமைகளைப்பற்றி சிந்தித்தபடி எங்கள் சுவடுகளை புதிதாய் இந்தப் பழைய பூமியில் பதிப்போம். இடையில் எனது கையை மீறி நீ போயே விடலாம். உன்னை இழுக்கக் காத்திருக்கும் இந்த அமைப்பு, ஆயுதங்களையும் வன்முறையையும் போதை பொருட்களையும், கள்ள சந்தையில் வித்து உன் வசீகரங்களை வாரி எடுத்துப் போகலாம். நீ கூட ஒரு வக்கிரம் பிடித்த பிரஜையாய் நடு வீதியில், ஒரு பெண்ணை துகிலுரியலாம். அவளை ஒரு பாலியல் பண்டமாய் அன்றி வேறெந்த நட்பு நோக்குடனும் பாக்காது போகலாம். உன்னை நெருங்கி வரும் சிநேகிதிகளை கருணையின்றி உன் ஆணவத்தின் பேரால் விலத்தி வைக்கலாம். அவர்களிற்குப் பின்னால், -அவளவை எல்லாம்- என ஒரு இழுவை இழுக்கலாம். அப்போ உன் சுயம் அழிந்து உன்னை இந்த உலகம் அதன் வசீகரமான வலையில் விழுத்தியே இருக்கலாம். இருப்பினும் குட்டி, இந்த நம்பிக்கை, இன்றின் ஈரம்- வெளியில் மழை. உனக்கும் எனக்குமான சிநேகம். வீட்டை நிறைக்கும் உன் அபூர்வ சிரிப்பொலி. என் நெஞ்சினில், சிறுவர் பூங்காவில் தன் குழந்தையை தொடரும் தாயின் கண்களாய், பாதுகாப்பையும் கவனிப்பையும் உனக்கு வழங்கச் சொல்கின்றன. என் கைகளைத் தட்டி, அல்லது வெட்டி நீ முன்னேறும்வரை- அதற்குப் பிறகும்- அதை எக் களங்கமுமின்றி உனக்கு வழங்குவேன் (தொடர்ந்து), உனது இதயம் களைக்கும்வரைக்கும். ~ 4: 10 மத்தியானம் யனவரி 31, 01 |
Comments on "சகோதரன்"
இதில் பின்னுாட்டம் இடலாமா என்று தெரியவில்லை. தனிப்பட்ட உறவோடான உரையாடலாக இருக்கிறது. நீங்கள் பரந்த கரிசனையோடு இருப்பதை நான் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன் (ஏன் அடிக்கடி நினைவில் வருகிறது என்று தெரியவில்லை)
Its open thamilnathy. I left this blog since 2006 or something, due to its personal exposure.
In truth, I lost this kind sister/gurl along the lines :)
Now, I am not her, I miss her.
But thanks for your words, and would you ever come back or what? :P