Name:
Location: DIASborough, Ontario, Canada

Born in a small town in the Northern "Ceylon", having Tamil as mother tongue, moved to the capital Colombo in 1991; then to an Occupied Land (Called "Canada" [but itz ˈkænədə in this landerz tongue) in 1995; living in Diaspora ever since. With those place changes, there is still (and I think always) a small town gurl within me, who doesn't fit in the big city images of all sort.

Powered by Blogger

Monday, July 24, 2006

கதை 05

இன்றில் பழந் தேவதைகள், தூசி படிந்த வீணை, கொஞ்சம் நினைவுகள்
வீட்டுக்குப் பின்னால் ஒரு காலத்து எங்களுக்கு சிநேகமான சிறு காடு. உயரமான மரங்கள்... சரி விபரணை போதும், முக்கியமானவை அத் தூங்கு மூஞ்சி மரங்கள். ஊடே ஓடுகிறது, பாதங்களுக்கு சற்று மேலே குளிர்ந்த நீர் முட்டும் ஆறு. நானும் நண்பர்களும் மீன் பிடிப்போம். நேரங்கள்... பற்பல மணித் துளிகள் கடக்க கடக்க அது சார்ந்த எந்த கவலையும் அற்று சொப்பிங் பா(b)க்குகளுள் சிக்குப் படும் மீன்களுள் இருப்புக்கான போட்டியிடல். நினைக்கிறேன். ஆற்றுக்குள் நின்று, நிமிர்ந்து பார்த்தால் கட்டிடங்கள் உயர அதற்கும் உயர வானம், இறுக்கிக் கட்டலாம் அவ் அழகை. ஹெலிகொப்டரால் வந்து ஆற்றுக்குள் இறங்கும் சொப்பனம் என்னுள். இன்று அவ்வாறு நான் செய்ய இயலுமா, கனவுகள் உண்டா. ஆற்றில் மீன் பிடிப்பேனா. என் சின்னச் சகோதரர்களுள், ஹீரோயின் ஆக யார் அதிகம் மீன் பிடிப்பதென சகோதரி நண்பிகளான நாங்கள் முயலுவோமா? சொல்லு ஜெகன், ஒவ்வொன்றையும், சின்னச் சின்ன விடயங்களையும், உன் எல்லா சேகரிப்புகளையும் நீ என்னுடையவள் எனத் திமிர் பாராட்டாமல் சொல். எதைக் குறித்தும் விளக்கமோ சுலபத்தில் கூறிட இயலா: சுதந்திரம் என்பதே சுதந்திரம் இன்மையின் பிரம்மை பிடித்த பிம்பம். பிம்பங்களுக்குள் வாழமுடியாது, அதிலும் அநுமானங்களைத் தாங்க முடியாது. ஆதலால் சொல்லு, பார்வைகளைப் பற்றி உனக்கென்ன தெரியும். சப் வே யில் ஒரு இளைஞன்: ஒரு முதிர்ந்தவன் இரு வேறு முகத்தைப் பார்க்கையில் தளம்பும் பார்வைகளைப் பற்றி உனக்கென்ன தெரியும். மதுமதியைக் காதலித்தபோது நான் உணர்ந்தது காதல் பொறாமையல்ல இருப்பின் நேசத்தின் இயல்பென்று தெட்டத் தெளித்ததுபோல எனக்கு நீ சொல்ல வேண்டும், காலங்களுக்குரிய கதைகளை... அவை என் கண் நோவை எடுக்கட்டும்.
உடம்பு வலிகளைப் போக்கட்டும்.
ஆத்மாவின் துக்கத்தை அகற்றட்டும்.

ரங்கள். நெட்டை ஒடிசலாய். பனிக் காலத்திலும் இலை உதிர் காலங்களிலுந்தான் தங்கு தடையின்றி இரசிக்க முடிகிறது. அடர்த்தியான கிளைகள் மோகமூட்டி காற்றிசை கமுக்கூடுகளையும் சிலிர்ப்பிக்கும் வெய்யிலில் தனித்து பாதையில் நடப்பது பகலிலும் பயமே. இலைகளின் மறைப்பற்ற குளிர் காலங்களிலும், இலை உதிர் காலங்களிலும் இதன் ரகம் வேறு. நட்பாய்க் கை பற்றும் சிநேகம்போல அவையும் உறவு கொள்ளும். அவன் ஆச்சரியப் படுவான். 'எல்லோருக்கும் செழுமை பிடிக்கும். உனக்கென்னடா எண்டா...' 'செழுமை தவிரும் எளிமை' என அவள். அவனோ தொடர்ந்து, 'இலைகளில்லாத மரங்கள் செட்டை இல்லா சிறு குருவிகள் போல' எனுவான். 'ம். ஆனால் இந்தக் காடுகளில் ஒன்றில் குருவிகளின் சிறகுகள் இலை மறைப்பூடேதான் ஒடிக்கப்பட்டன தெரியுமா? ...எனினும் உனக்காகச் சின்ன உடன்பாடு. மழைக் காலங்களில் மாத்திரம் எனக்கு இலைகளை உடைய பச்ச்சை (அழுத்த) மரங்களும், பசும் புற்தரையும் வேணும், அக் குழுமைக்காக'
'இல்லை. செழுமையில் விளைவதே குழுமை' விடாப் பிடி பிடித்தான். காதுமடல்களை நெருங்கி வசீகரமாய், 'சறோ... ஒத்துக்கொள்ளேன்' கிசுகிசுப்பாய் எழுதினான்.
'உடன் பட்டேனே போதாதா?'
'ம்ஹீம். சொல்லு, அழகு: காதலுடன் பார்க்கையில் இயற்கை அழகு'
'சரி இயற்கை அழகு காதலுடன் பார்க்கையில்'
'ஹே... இயற்திரமாய்ச் சொல்ற'
'இயற்கை அழ...கு கா......தலனுடன்'
'நக்கல்'
'உண்மை'
அவன் கோபமானான்.
தலையைக் கோதினாள். கோபுரமாய் எழுந்தன கட்டிடங்கள். நீள எழுந்த கம்பத்தின் மேலே தன் குறியைத் தொட்டபடி அண்ணாந்து வானத்தைப் பார்த்தான் சிலை மனிதன். நகரம் நனையும். மழை. பளிச்சிட்ட புற்தரை. அவளும் அவனும். இறுகப் பற்றின கரங்கள் தளர்வது அவனின் கேள்வி விழும் வரைத் தோன்றவில்லை. இரவு. இல்லை சாம்பற் புகார்: மரத்தடி. சறோவுக்குச் சிநேகமான மழை மூக்கிலும் முடியிலும் பிரத்யேகமாக வடிய நீர்ச் சுவை வாயுள்ளும் பூர, உதடுகளால் உள் எடுத்து வெளி விட்டாள். மழை பேசும்... ஒருநாள் அவளும் ஜெகனும் கொட்டும் மழையில் நின்ற நினைவு. அன்றும் காரிருள். இடை மின் குமிழ்கள் அற்ற நிலாவொளிப் பாதை. புகை. அவன் அணிந்திருந்த ஆடை நிறம் மறந்து விட்டது. கூதல். உடல் கூச ஒட்டிக் கொள்கிறாள். அவன் மீண்டும் கேட்டான். இந்தத் தடவை சிறிது சாந்தமாய்... 'உண்மையைச் சொல்லு சறோ. உனக்கு அவனில காதல் இல்லை? இருக்கேல்ல?' முழுவதுமாய் நம்பாவிட்டாலும், 'இல்லை' என்ற ஒற்றைப் பதில் வேண்டிக் கேட்கிறான். 'இருக்கு' என்பது தீர்மானம். அதிலும் திருப்திப் படப் போவதில்லை. அலட்சிக்கும் மழை இன்னமும் சிநேகம் கொள்ள விரும்பியது போல் இருந்தது. கடும் கருமை சில்க் மேற் சட்டை மிகவும் அந்தரங்கமாய்ப் பேசியது. நீல டெனிம். பருத்தியும் சில்க்கும்போல கறா(ர்!) பேசாது. சொர்ணா பிற பிரக்ஞைகள் ஏதுமற்று தனை மறந்து ஆடுவாள். ஜன நடமாட்டமோ, பிறரின் நெருக்கமோ அவளைப் பாதிக்காது. அவளைக் கிளர்த்திய சினி பாடலில் ஒரு இசை உருவாக்கி, இசைவாய் உடம்பு மெல்லிய கம்பியிலும் வேகமாய் வளைய, ஒரு கை தேர்ந்த நடனக்காரியாய் -அறைக்குள் ஆடுவது போலல்ல, மழை நடனம் நளினமாய் இருக்கும் (கூடவே நண்பன் ஆடுவதால் இருக்கலாம் (வெகு காலம் கேட்டபடி இருந்தாள், தனக்கொரு நடனத் துணை வேண்டி!))- அவனது முறையை தானே உருவகித்து ஆடுவதைப் பார்க்க ரசமாய் இருக்கும். 'எப்படி இருக்கு' கேட்டு, அதுவும் போதாது. சறோ மழையோடு சிநேகிக்க விடாமல், ஆடலை முழுதுமாய்ப் பார்க்குமாறு பிடிவாதப் பிடி பிடிப்பாள், இவனைப் போல... அவன் திடுமென எழுந்தான்.'சறோ! நீ பலமா யோசிக்கிற அளவுக்கு கடினமா நான் கேட்கேல்ல. இது ஒரு 'இல்ல-இருக்கு' கேள்வி. நீ யோசிக்கிறத பாத்தா சிக்கலோ எண்டு தோணுது.'
எல்லாம் காதில் விழுந்தது, விளங்கியது. என்ன சொல்வது... தெரியவில்லை. ஜெகன் என்ன செய்துகொண்டிருப்பான். சறத்தை இழுத்து தொடை இடை வைத்து கதிரையிலமர்ந்து நிதானமாய் வரி பிசகாமல், சாவகாசமாய் அவனால் அவளைப் பற்றி யோசிக்க முடியுமா, அசைபோடுவானா. சிரித்துக் கொள்வானா. (சலிப்பு எனப் போட்ட புத்தகத்தை மீள வாசித்தேன், பிடித்திருந்தது. எதையும் ஒரு பட்ச முடிவாய்த் தூக்கித் தூர எறியும், நிராகரிக்கும் வரட்டு ஈகோ பிடிச்ச இந்த புத்திஜீவிகள்போல நானும் ஆகிவிட்டேனோ என என்னைத் திட்டிக் கொண்டேன். அட பிடிக்கவில்லையென்று பலருக்கு விமர்சித்துவிட்டேனே, இனி எப்படி பிடித்ததெனச் சொல்வதென அவர்களுக்கேயுரிய குணாதிசயங்கள் தொற்ற -இப்படி உனக்கு நிகழ்ந்துள்ளதா ஜெகா. தப்போ, எழவோ, சொன்னால் பார்! பார்! உன் முடிவெல்லாம் தப்பென சொல்ல வெளிக்கிடுவார்கள். வெறுப்பேற்றுவார்கள். பிறர் சொல்வதை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கும் சகல சக்திகளையும் நிராகரிக்கிறேன். ஒரு மனிதனின் கால வளர்ச்சியை புரிந்துகொள்ளாத மூச்சுத் திணறும் சூழ்நிலையில் நிற்பதாய்ப் படுகிறது. நேற்றைய தடக்கல்கள் இன்று உறுத்துகின்றன.)
'கஸ்ரமாயிருக்கு சறோ'இப்போது உண்மை சொன்னான். வான் நீர் ஊற்றாவிட்டால் விழிக் குழப்பம், ஒளிப் பீறிடல், நீர் ததும்பல் நிச்சயம் தெரிந்திருக்கும். மார்புக் கல் இளகியது. 'யோசியன்டா, ஓம் எண்டு சொல்றதில எனக்கென்ன கஷ்ரம்' அவளுக்குப் புதினமாய் இருந்தது. அவனுக்கு போதுமாயில்லை. எனினும் அப்போது அதை-அவள் குரல் தரும் திடத்தை- தன்னுட் போட்டு மௌனமானான். மழையும் மௌனித்துக் கொண்டதுபோல் இனம் புரியாததொரு சோகம் இறுக அணைத்தது. கண்களை அழுத்தி மூடினாள். ஆண்டுகள் பற்றின பிரக்ஞை அவசியமற்றிருந்த பருவத்தில் அவ் வார்த்தைகள் இருந்தன, ஆதி நிர்வாணத்தின் நேர்மைபோல சுத்தமாய். நீங்களோ இறுக்கமாய் இருக்கிறீர்கள், உங்களிடம் தரம் பிரிக்கும் அகராதிகள் இருக்கின்றன. சீர்-ஒழுக்க அழிவுகள் குறித்து: அறத்தின் ஆயுள் குறித்து வரையறுத்து, அதில் வாழ ஆரம்பிக்க, கட்டுக்குட்பட்டவை கட்டைக் குலைக்கையில், அகராதி கொஞ்சமாய் அதிர்ந்ததா. அதிர்வுகளுக்கு அதிரா புதிதொரு அகராதி தேவையாய் இருக்கிறதா. மொழி அழகானதில்லையா, அதற்கு எல்லைகள் வைத்த உங்களில் எவனால் அதன் மூலத்தை கண்டறிய முடியும்.சொற்களின் வரையறையை மீறி(ய) உலகினுள் நுழைந்தேன். பூரிப்பின் மொத்தம் அவனாகி இருந்தான். எதிர்பார்ப்புகள் இல்லா உறவு கனவாகி எதிர் எதிர் பார்ப்புகள் அலுத்துவிட்டன. ஆகாசம்போல முகில் மறைப்பினும் கொஞ்சமேனும் உண்மை பேசி வாழ பெரு விருப்பு வந்தது. எதிர்பார்ப்புகளின்றிக் கை கோர்த்துக் கொள்ளவும், அணைத்துக் கொள்ளவும், கண் சொருகித் தூங்கவும் நட்பின் கரங்கள் விசாலமாய் நீள காதலிக்கும் ஆணின் மிருதுவான வருடலாய் சிநேகம் (காதலிக்கும் ஆண்களின் சாபம் அப்படியல்ல, பொல்லாதது!) துளிர் விடும் மனக் குவியலில் ஜெகன். எப்பேர்ப்பட்ட பெண் என அநுமானித்துக் கொண்டிருந்தனர். நேரே மார்பு நடுவில் ஈன சுரத்தில் முனகக் குத்திப் போயின கரங்கள். ஆர்ப்பரித்து எழுந்து கீழே விழுந்து உடைந்தன வேறு சில. அவன், 'உன்னால் எப்படி இப்படி இருக்க முடியுது' என்றான். உதடுகளைக் கீறி முத்தமிடும் ஓர் ஆவேசம் போல எங்கெங்கிருந்தோ அநுமானங்கள். பிற பிற... அவற்றுக்குப் பொறுப்பானவர் யார். என்னை அநுமானிக்க எவருக்கும், எந்த எவனுக்கும் அதற்கான அருகதையும் (அது கனடிய, புகலிட வரையறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட!) வார்த்தை சத்யமும் உண்டா. புண்ணாக்குப் புடுங்கல்களுள் அரசியல் கூத்தாடி அஃதுள் தம்மை மறைத்த அசுத்த விழிகளின் கறைகளைப் பிடுங்க முடியாது முரண்டும் என் அதிர்வுக்குள்ளான சிறு உடற் துடிப்பை, அதன் துயர இழைகளில் பின்னலாய்த் தொங்கும் மாமிச மனிதர்க்கு எப்படி புரிய வைக்க. ஒழுக்கங்களை நிராகரித்த -அதற்கு நியாயங்கள் கொண்டுள்ள- வாய் ஜாலக்காரர்க்கு இனிக் குழந்தையைப் புணர்தலை எழுதவும் நியாயம் கிடைக்கும். அதை இருந்து பார்த்துப் பேசி, இரசித்துச் சிரித்து, -கு(க)டி மொழிதலின் பின், 'அது குழந்தையைப் பொறுத்தது' என விமர்சிக்க நான் தயார் இல்லை. உள்ளே விஷமாய் தங்கிய நெருப்போடு அணையாதிருக்க விரும்பினேன்.அந்தர(ங்க)த்தில், காற்று-வார்த்தைகள். ஆம், நான் வாழ ஆரம்பித்தேன்.
சுப்பிறின்ரனின் நோட்டிஷின் தொடர்ச்சியாய், மாலை மயங்கி களைத்து உறங்கி விட்ட பல நொடிக் கரைவில், குசினி-ஹோல்-அறைகள் கொண்டுள்ள மேசைகளில் சிவத்த, மஞ்சள், மங்கிய வெள்ளை வர்ண மெழுகுதிரிகளூடு ஓர் ஒளி உயர்ந்தது. மின்சாரமற்ற இரா. மழை வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது என அப்பா -பிரதியாய்- அம்மா பேசிக் கொண்டிருக்க. சொர்ணா ஒழுங்கற்ற ஓவியமாய் படித்தபடி..
நெஞ்சம் தட்டையாய்த்தான் இருந்தது. அவனின் கையின் அழுத்துதல்களும், குரலின் அழுத்துதல்களும், மனசின் அழுத்துதல்களும் ஒவ்வொரு தூறலுக்கும் ஒவ்வொரு விதமாய் அழுத்தலாயிற்று. சுதந்திரமாய்க் கிடந்த மார்புகளுக்கு நடுவில் கணவாய் ஓடுபோல ஒன்று தங்க, தவிப்பு. எப்பொழுதும் தாக்கும் போரிட அழைக்கும் வருத்தங்கள் சுமக்கும் நெஞ்சோரம் சத்தமிடும். கண்ணாடி யன்னல் வழி, அதுவும் நீராவி படிந்த தெளிவின்மையூடே, எதையோ தேடி கைகளை விசாலித்து அம்மா என்று பிரபஞ்ச பேரானந்தம் கொள்ள நுனிகள் ஏங்கின. ஆன்மா துயரமான நடிகையை, திரையில் வெறும் பிண்ட நடனமாய் உடம்பால் சந்தோஷித்தல் சாத்தியமெனில் சரிதான், அஃதால் மேலும் தொடர்ச்சியாய்ப் பிண்டங்களை மகிழ்வாக்க. ஆழ்ந்த மூச்சு கிளம்பும்.
...நகரம் நனையும் பொழுதுகளெல்லாம் விசனங்கள் சூழ்கின்றன. நேற்றும் அவன் கோபங் கொண்டான். அதைவிடு, சொர்ணா பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கிறாள். மெழுகுதிரியுடன் நான் உன்னையும், உறவுகளையும், நினைக்கிறேன். இந்தக் குழந்தைகளின் வேதனைகளை நினைக்கிறேன். உறவுகளிலிருந்து விலகி விடுவதாக, அன்று முடிவெடுத்திருந்தோம். எம் போன்ற முனைப்பற்ற குழந்தைகள் சோர்வுற்றுக் குழம்பின. புரிகையில் தவறு செய்ததாய், எம் பிடியில் குழந்தைகளைத் தக்கவைத்த வலி எழும்பியது. வாழ்க்கை இவ்வளவு கடினமா ஜெகன். காலைப் புலர்வில் நம்பிக்கை தரும் சூரியன் கர்ண கொடூரமாய் ஏன் சுட்டெரிக்கவும் செய்கிறான். கண் முன் உருகும் மெழுகில், பிரியத்துக்குரிய பெண் படித்துக் கொண்டிருக்கிறாள். உலகத்தைப் பற்றி என்னதான் படிக்கிறாள்? அதை எப்படி -யஸ்ட் லைக் தற்- என ஒரு சிம்பிள் ஸ்ரேற்மன்ற் ஆய் மறந்தே விடுவது. நள்ளிரவு தாண்டிய பின்பும் எப் பிரக்ஞையும் இன்றி அநுபவித்த மணி மணிச் சுதந்திரம், கேள்விகள் இன்றி இவர்கள் முன்னுதாரணமாய் எடுத்துவிடலாமோ என்கிற அநுபவத்தின் எச்சரிக்கைச் சமிக்ஞை, உடைந்து போனேன். என்றுமே ஒட்ட முடியாத கண்ணாடித் துண்டுகளாய் என் சகோதரிகளை -முக்கியமாய் கொழும்பில் ஒரு மெல்லிய சிறுமியாய் சிலுப்பாய்த் தலையோடு துள்ளிய குழந்தையை- காப்பாற்ற முடியாதவளாய் ஆயினேன். குழந்தைகள் இப்போ குழந்தைகள் அல்ல. அவர்களின் ஏன்கள் மீடியாவால் அமுக்கப்படுவது போதாதா. என் குழந்தைகளை முட்டாள்களாக வளர்ப்பதை நான் விரும்பவில்லை. இளவரசி டயானா: தேவதைக் கதைகளின் அழுத்தங்கள் மிகு அந்த 'மீடியா பிகர்' மீது என் சகோதரிக்கு அபரிமிதமான காதல் (அவளின் ஆடைகளுக்காக மட்டும் அல்ல!). அவள் தன் புத்திரர்களை, லண்டனின் வறிய பக்கங்களுக்கு அழைத்து 'இதுதான் உண்மையான பிரித்தானியா. நீங்கள் வளரும் அரண்மனை அல்ல' என்பாளாம். கண்கள் விரித்து, வெகுஐன புனைவுகள் சகிதம் கதை கதையாய்ச் சொல்வாள். மேலவும், கவிதை/கவிதை என்று எழுதுவாள். கடைசியாய், ஆங்கில வகுப்புக்காக என்று ஒன்று. எல்லைகளை மீறும் அடி மன ஆசையும், மீற முடியாத பிம்பங்களின் மயக்கமுமாய், இந்தப் பெண் சுழலின் யதார்த்தம். நீ, என்ன சொல்கிறாய்.

வீட்டிற்கு வரும் அப்பாவின் நண்பர்
அச் சிறு வயதில்
என்னைத் தொட்டதும் எச்சிற் படுத்தியதும்
நகக் கீறலாய் புலியின் சீறலாய்
இதயம் அடித்ததும்
பேரழகி என பெருங்கவிஞர் சொன்னதும்
வயது கேட்டு பின் அஃதில் ஆர்வமோ எனப் பிறர் கணித்ததும்
என்னை எல்லோரும் நெருங்குவதும்
எதை வைத்து, எந்த அடிப்படையில்
என நான் கேட்டேன்
கேட்கையில் சிலவேளை முளைத்தும் விடுகிறாள்
பையன்கள் தொடர்வதை அங்கீகாரம் என
கிளர்ச்சியுறும் இன்னொரு பெண்.
நான் புதுமைப் பெண் என
சேலை, நகை உடுத்தும் விசித்திரப் பெண்ணும்
என்னுள் இருக்க
அசட்டுப் பிசட்டாய் என்னைப் புகழும்
ஒருவனல்ல, என்னை என்னாய் நேசிப்பவனே
எனும் நான் ஒரே பெண்ணாய், ஒரு முகத்துடன் வ(ள)ர
இருப்பதோ சொற்ப காலம்.

எம் ஒவ்வோர் பருவ ஆரம்ப முடிவிலும், அம்மா தன் வயிற்றில் நெருப்பைக் கட்டினாளோ இல்லையோ என் சகோதரிகளை சூழவும், ஓநாய்களும் உடும்புகளும் பாயவும், உடலங்களை சிராய்க்கவும் தயாராய் இருப்பதாய், புத்தியுள்ள இடமோ (அதை நிர்ணயிப்பது யார்), புத்தியற்ற இடமோ (இது தேவலாம்), அவர்களின் குரூர விழிகளும், கூர்ந்த நகங்களும் என் அழகு (அவளது அடையாளங்களுடன்) சகோதரியைக் கீறி விடுமோ, விழும் இரத்தம் உலக வெளியில் முக்கியமே அற்ற சிறு செய்தியாய் ஆகுமோ எனப் பயங்களைக் கட்டினேன். அந்தக் காலங்கள் இன்றென்ன கனவுகளா ஜெகா, வாழும் ஒவ்வொரு பெண்ணினதும் வாழ்தலுக்கு எதிரான போர் முன்னே நிறுத்துதல். பெண்ணின் இயல்புகள் எப்படியெல்லாம் எடுத்துக்கொள்ளப் படுகின்றன என நினைத்தேன். தத்துவங்களால் நான், துரத்தப் படுகிறேன். எல்லாவற்றையும் எழுது எழுது என்கிறாள் தோழி. வருத்தப்படாதே உன் போன்ற அறிவார்ந்த வர்க்கங்களுக்கு நான் ஒரு போதும் போட்டியாகப் போவதில்லை. அதோடு, நான் எப்படிப் போட்டியாக முடியும். நிறுத்து. உனக்குத் தாழ்வு மனப்பான்மை என மீண்டும் ஆரம்பிக்காதே. இத் தீர்ப்பு வழங்கல்கள்தான் அபத்தமானவை. இப்படி பேசுவதால் ஒரு பக்கத்தைப் பற்றியே பேசுவதாக சொன்னாலும் அதை மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன். நீ, வேறு எப்படிச் சொல்லுவாய்.
.............விடுபட்டுள்ளது............
அந்த ஓவியத்தின் தலைப்பு 'இனிக் கனவுகள் இல்லை.' முந்தி, கோட்டுச் சித்திரங்களில் மனம் பறிகொடுக்க முன்னம், தண்ணீர் ஓவியத்தை லாம்பில் காயவிட வருவதில் எழும் பூரிப்பு. கனவுகள் இல்லையா, கனவுதல் இல்லையா, கனவுகள் எப்படி இல்லாது போகும்... ஒவியத்தின் உணர்த்தல் வசப்படா கவி மொழி போலொரு போதையாய். 'சமூகத்துக்கு நீ அவநம்பிக்கையையும், விரக்தியையும் தருகிறாயா' அவளுடைய கேள்வி மேம்போக்காய் போயிற்றோ என்னவோ... அவன் சொன்னான், 'வலியின் விளிப்பில் வார்த்தைகளும், உருவின் அழிவில் கனவுகளும் இல்லை' 'நாம் மிகுந்த அவநம்பிக்கைகளைச் சுமக்கும் சந்ததியுள் நிற்கிறோம்' முடிவுறுத்த அன்று கறுத்த நிறக் கலவையுள் செம் மஞ்சள் கலந்த உருவழிவின் அழுதலைத் தரிசிக்கும் கனா வந்தது. கனவுகளைத் தருவித்த ஓவியம் 'கனவுகள் இல்லை' என்பதில் உலகின் குரூரம். அவன் உபயோகித்த சிறு கோடு பெரும் கீறலாய் தொந்தரவு பண்ணிற்று. ஒரு கவிதை பல அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டு இருக்கையில், எப்படி இருக்கு எனவொருவர் கேட்க நல்லாயிருக்கு எனும் பதில் தந்த கதியாய், நேற்று சிறகொடிந்த தேவதையின் துக்கம் பற்றிப் பேசினான் ஒருவன். வழமைபோல் சிறகே இல்லாத் தேவதை பற்றிக் கேட்க நினைத்தாள், கேட்கவில்லை. அவளும் ஜெகனும் இனி எப்போதாவது சந்திக்கும்போது 'ஒருவேளை இனி' தத்துவத்தின் கீழ் வாழ்வின் துயரங்களைப் படித்தவாறே, 'உன்னோட வாழ்ந்தா நல்லாயிருக்கும்... நல்லா இருந்திருக்கும்' என்றவாறே 'நீ கேக்கேல்லியே' 'நீ கேட்டிருக்கலாமே' என்றெல்லாம் புலம்பித் திரிவோமோ எனத் தன்னுள் கேட்டாள். ஆண் பெண் உறவு எப்போதும் உடலோடு என பின்னிய அவர்களின் குரல்களாய் காற்றில் கண் தெரியாக் கிருமிகளாய் அக் கேள்விகள் வாழ்ந்தன. அவனைப் பற்றி யோசியாதபோது, தூரமாய் ஜெகன் வந்து ஒட்டிக்கொள்கையில் கூடப் பயணிக்கையில் சிரிக்கையில், சக பயணியை விட பச்சையாய், இரு வேறு தடவை முதலாழி 'காதலனோடு கனவா' என நக்கலடித்துப் போனான். அவனுக்கோ அவளும் ஜெகனும் 'வெறும் நண்பர்கள்' என்பதை நம்பவே முடியவில்லை. அப்படி எப்படி இருக்க முடியும் என்கிறான். ஏதும் இருந்தால் தனக்குப் பிரச்சினையில்லை என்றும், ஏன் மறைக்கிற என்றும் கேட்கிறான். அவன் மட்டுமென்றல்ல. பால் பாகுபாடில்லாமல், அனைவரும் கேட்கும் இக் கேள்வியை தன்னிடம் மாற்றிக் கேட்டாள்: 'நாம், ஏன் காதல் வீதியில் உலாப் போகவில்லை' (பொதுக் குறிப்பு: சிரிக்காதே.) அப்பாவிகள் போல அவர்கள், 'அதெப்பிடி ஒரு ஆம்பிளையும் பொம்பிளையும்....' என ஆரம்பிக்கையில் நான் சலிப்படைகிறேன். 'அம்மாடியோவ் அதுவா' என இமைகளைக் கொட்டி, ஒரு நாடகம் போடலாமா, தோன்றி விடுகிறது. அத்தனை அலங்காரம் அவர்கள் பேச்சில். எனக்கும் உனக்கும் இடையில், 'எல்லைகள் கடந்து' வராத ஒன்றை இழுத்துப் பிடித்து இருத்தியிருக்க வேண்டுமோ. இயந்திரத் தடங்கள் நெருக்கும் போதில் அதை அழித்து முழு பலத்துடன் எழுவேன். இப்போதெல்லாம் நிரம்ப யோசிக்கிறேன். பிற வீடுகள் செல்லும்போது, நண்பர்களதாக இருப்பினும், படுக்கை அறை செல்வதில்லை என உனக்கு கோட்பாடு இருப்பதுபோல எனக்கும் சில எல்லைகள், கோட்பாடுகள், முடிவுகள் எனக்கென்று எனக்காக இருக்கா என. மனித பலங்கள் எத்தனை வீரியம், ஆனால் அவன் பலகீனங்களால் அல்லவா அலைக்கழிந்துகொண்டிருக்கிறான். பலம், பலவீனங்களின் நிர்ணயம் எது. அவை அவனுக்குரியவையா, நியாயங்களைத் தேடப் பயிற்றுவிப்பது ஏது? பயங்களா... ஈகோவா.......
முறிந்துபோய் கிடக்கும்போது எழுப்பி உட்கார்த்தி விடுகின்றன, ஓடப் போகிறேன் என்றால் சரியான ஆளோடதான் ஓடுவிங்க, என்றாற் போலான நம்பிக்கைகள். பொலிவுடன் ஜெகனின் குரல்கள் கட்டில் விரிப்பு மேலே ஜீவித்திருந்தன, ஒளிப் பீரீடலுடன்; ஆயிரங் கோடி யானை பலம் சுமந்து. கார்த்தி... ஆண்களின் உலகில் இருந்து நான் விரட்டப் படுகிறேன் எனக் கூக்குரலிட்டு, சில்லிட்ட கார்த்தியைச் சந்தித்தாள் மரக் காட்டு பாதையில் சாய்ந்து சாய்ந்து நடந்து வந்துகொண்டிருந்தபோது. என்னமாய் மெலிந்து விட்டாள். உடல் இழப்பிலும் சறோ சவுக்கியமா என மாற்றமற்ற வாசனை உணர அவளால், அவளால் மட்டுமே முடியும். 'என்னடி இப்பிடி ஆயிட்ட' உடல் ஸ்பரிசத்தை உள்எடுக்க நினைவு பறக்கும். அவளைத் தேவி என்பான் வேந்தன். எத்தனை பெயர்கள்... இறுதியில் பெயர்கள்தான் எஞ்சிவிட்டன உருவங்கள் மறைந்து. கார்த்தியின் உருவம் அவளுள் வெகு நாளைக்கு முன்பு கண்ட கனாவாய்த் தோற்க, 'எனக்கு மனிதர்களை மறப்பது இன்னமும் கனவாய்' அவளோ வாய் ஓயாள். நட்பு மட்டும் கரங்களை அழுத்தமாய் பதிக்கும். சுவடுகள் 'ஏன் எனக்கு எழுதத் தெரியாதாமா. அவர்தான் வந்து படிச்சக் காட்டினாராமா.. போடி என்ன சொல்ற நீ' உன்னை நான்தான் வளர்த்து விட்டேன் என்று, தம் கை ஓங்கியிருப்பதை பார்த்து, ஏறிக் கொள்(ல்)ளும் மனிதர்களைப் பார்த்துச் சலிப்படைந்த, 'வளர்த்து விட்டேன்' பேர்வழிகளைக் கண்டு அதிக பயமுற்ற, கொம்பனி புகழப்படும் தனித்தன்மை மழுங்கடிக்கப்படும் கொன்றாக்ட் நடத்துதல் அனைத்து மட்டங்களிலும் தொடர, சிரத்தையற்று மீளப் படியும் சுவடுகள் (சுவடுகளுக்கு முற்றுப் புள்ளி வேண்டாமே)

ள்ளங் கையில் கோடுகள் அழிந்தன. நாங்களே எல்லாவற்றையும் நிராகரித்தவர்களாக, -அதுவும் எக்கதக்கவாய் அல்ல, மிக மெதுவாய்- பிறகு இணைத்துக் கொண்டவர்களாக, கற்பு பற்றி மிகக் கடுமையாக இல்லை என நினைத்தபடியே சக மாணவனின் கை பட்டாலே மகா அபத்தமாக நடந்தவர்களாக, மயக்கமுற்று மீண்டவர்களாக எல்லா மாதிரியும் இருந்திருக்கிறோம் ஜெகன். அப்பாவை அம்மா குறைத்தால் துணுக்குற்றும், அம்மாவை அப்பா குறைத்தால் தவிப்புற்றும் வீட்டுக்குள்ளே நிறைவைத்தேடி ஆங்காங்கே குழப்பகதியான அனைத்தையும் அங்கீகரித்தும், நிராகரித்தும், தடுமாறியும் ஆயிற்று. இன்னமும் எங்களுக்கு, சராசரி தமிழ் பெண்கள் என்ற ஒற்றை சொல் நவீன பெயர் சூட்டாளர்களால் பொருத்தப்பட்டிருக்கும், பொருந்தியும் இருக்கும், அவரவர் அகராதிப்படி. குழம்பியிருக்கிறோம் என குரல்கள் இறுக்கினாலும் சமயங்களில் தெளிவாகவும் இருக்கிறோம். படுத்து எழும்புபவர்களுக்காக, படுத்து எழும்புபவர்களாக இலக்கியம் படைக்க முடியாது. இன்று நிர்க்கதியில் நிற்பதுபோல, எவனும் நினைப்பதுபோல எந்த ஆகர்சமும், நிலைப்பதாய் இல்லை. யாரும்... யாரும் வேசை என அழைக்கக்கூடிய உரிமை(?!)யுடையவன் முதல், அதை எடுத்துக் கொண்டவன் வரை எவனாலும் துணை வரமுடியாது. பாதையெங்கும் வரட்டு முகங்களின் பிரஸ்தாபத்துடன் கூடிய கடுமை. தகாத உறவுகளை, ஆண் பெண் சின்னத்தனங்களை எல்லாவற்றையும் குழம்பி அங்கீகரித்ததாய், அதற்கு மாமி வேலை பார்த்ததாய் கேட்டு காலத்தைக் கோமாளியாய்ப் பார்த்தும் ஆயிற்று. எவர் எதை அங்கீகரிப்பது? இத்தனை வருட இடப்பாடுகள் ஒரு மேலோட்டமான வழியில் எடுத்துக் கொள்ளப்படும் என்றால் எந்த வரலாற்றை நம்புவது. எது எது மேலோட்டமானது, எதைப் பற்றிக் கொள்வது. அவரவர் பாதைகள், அவரவர் தேடல்கள், கொளுகொம்பில் ஏறி நின்று நான் பிறக்கும்போதே அங்கேதான் சகவாசித்தேன் எனும் மனிதர்கள்போல எவனும், எவரும், யோக்கியத்தின் வரையறைகளை மீறியும் ஆயிற்று. இனி என்ன, எல்லாக் கனவுகளும், எல்லாக் கணங்களும் எனக்குரிய மனிதர்களும் என்னிடமிருந்து விலகி விரக்தியுற்றுப் போனேன். தனித்த வனத்தில் மனசு அலைந்து திரிந்து எங்கெல்லாமோ அடிபட்டு, என் பிரியமான பெண் ஒருத்தி சொன்னது போல மீண்டும் மீண்டும் அறையப்பட்டு சிதைந்த உருபுகளில் என்னை-அவர்களைத் தேடினேன். மனிதர்கள் இலகுவாக இருக்கிறார்கள் ஜெகன். உலகின் வல்லமைகளை எதிர்க்கும் சக்தி நிரம்பிய பலம் மிகுந்த மனிதர்கள் உண்மையை நெருங்கும் சிரத்தையற்று இருப்பது சகிக்க முடியாதிருக்கிறது.வாழ்க்கை பற்றின கேள்விகள் அற்று இருப்பது அனைவருக்கும் இலகுவாய்.
'...இந்த வயசில சரி பிழை இந்தக் கேள்விகள் என்னத்துக்கு சறோ' என் உள்ளங்கைகளில் கோடுகள் அழிந்தன. தோள்களைக் குலுக்கி, 'ஒரு அனுபவந்தானே...' என்கிறாள். விதிர்த்துப் போய்விட்டேன் (இப்போவும் அழுகை வருகிறது). தடுமாறி மண்டை இடிக்க, இடிந்து போய்க் குந்தி இருந்தேன். எல்லா தவறுகளையும் தெரிந்து கொண்டே செய்வதற்கு நியாயங்கள் தேடும், அதுள் தம்மை மறைத்துக் கொள்ளும் இந்த நூற்றாண்டு மனிதர்களுள் நான் கேள்விகள் சுமந்தேன்.
எனக்கென்று வண்ணங்களோ
எனக்கென்று எண்ணங்களோ
ஏன் எங்கேயும் இல்லை.
நான் வட்டங்களுக்குள் ஒழிந்தும், மறைந்தும் அடங்கியும் போக சமூகம் இட்ட/இடும் தடைகளைக் கூறினால் ஏன் எவனாலும் புரிந்துகொள்ள முடிவதில்லை. எனது வட்டங்களை மீறி வரும் சவாலைப் பேசுதல் என்/பெண்-நிலை-வாதம் எனில் அதோடு உடன் படுகிறேன். அல்லாதபோது நான் விளக்கங்கள் கூற நிர்ப்பந்திக்கும் ஆணிடம் என்ன பதில் சொல்வது, ஏன் பதில் சொல்லணும்.என்னோடு பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண் சடாரெனச் சொன்னாள், 'சறோய் நீ பெண்ணியம் என்ற தலைப்புள் பேசுவதானால் தயவுசெய்து தொடர்ந்து பேசாதே.' அதிர்வுடன், 'நான் ஏதும் உனக்கு சம்மந்தமில்லாததைக் கேட்டேனா' எனவும், பேசாமல் இருந்தாள் (அது மிகவும் இலகுவானதல்லவா).
நாங்கள் ஒரு கடிதத்திற்கான சம்பிரதாயங்களைக்கூட மீறி விடலாம். பார், பட்டப் படு பகலில் ஆயிரம் இயந்திரங்களோடு இயந்திரமாய்த் திரிந்துவிட்டு நட்ட நடு ஜாமத்தில்(!) உன்னோடு பேச்சு. நகரங்களை நோக்கி வந்துவிட்டாலும், கிராமக் கவலைகளை இன்னமும் இழக்கவில்லை. அது சரியா பிழையா என்பதை விடு,எப்படி இப்படி இருக்கிறாய் என நீயும் கேட்டிருந்தாய். நான், கடுங் குளிரில் அசைய மறுத்து அமைதியான யன்னற் திரைகளைப் போன்ற திமிர்களை மதிக்கிறேன். அவை நியங்கள். என்றாவது ஒரு கோடையில் ஆடித் தம் இருப்பைக் காட்டிக் கொள்ளும். காற்றின் வருகையில் அசையுமவை சொல்லும் செய்தி எனக்குயர்ந்தது.
நான் இதுதான், இப்படித்தான் என்பதுபோல எதையும் அறுதியிட்டுக் கொள்ள விரும்பவில்லை. என் வரையில், சமரில் ஆட்டமும், குளிரில் அடக்கமுமாய் காலங்களுக்கு ஏற்ப வெளிப்பாடுகள் தவிர, என்னைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. அப்படியல்லாதபோது சில புனைவுகள்-என்னைப்பற்றின அவர்களின் புனைவுகள் விசனப் படுத்துகின்றன. மிகச் சிலருக்கு, நெருக்கமான மிகச் சிலருக்குத்தான் அதிகமாய் என் ரகசியங்களைச் சொல்லியிருக்கிறேன். அதில் ஒன்று, என்னிடம் பெரிதாய் இரகசியங்கள் இல்லை என்பதே. இந் நிலையில், உன்னைப் போன்றவர்கள் நான் ரகசியங்களின் இருப்பிடம், புதையல் என்றெல்லாம் குறிப்பிடுகையில், உங்களின் உலகில் தென்றலாய்த் தாவி, உங்கள் பொக்கற்றுகளுக்குள் துழாவலாய்க் கிடக்கும் அவ் இரகசியங்கள் பற்றி, நீங்கள் அங்கலாய்த்து இருக்கையில், அடடா ஒன்றும் இல்லையே- புதிதாய் ஏதாவது உண்டாக்குவோமா எனத் தோன்றி விடுகிறது. பிரைடா... நான் எனக்குள் அவளைப் படிய விட்டபோது, அவளது ஓவியங்களில் சுயம் எழும்ப, அவளானேன். அவளது ஓவியங்களை விடுத்தால் சுய குறிப்புகளிலும் அவளுக்கு எல்லாமே தீகோதான். நானோ அவனில் என்னைக் காணவில்லை. நான் சுயநலமா, நான் திமிரா, நான் ஆணவமா (பெண்பால்-பெணவம்?), நீ ஏதேனுங் கூறு. ஆனால் நான் (F) பிரைடா போல தீகோவில் எப்போதும் என்னைக் காணவோ துரோகங்களைச் சகிக்கவோ போவதுமில்லை. எனக்கு நான்தான், அவன். நான்தான் அவள், அது, இது உது சகலதுமே. நானில் என் கௌரவம், எழுத்தின் மூலம் ஏனெனில் இங்கு எனது வீழ்ச்சி வரலாற்று மாற்றம் அல்லவா?

சிறகுகள் விரிய விரிய, விளக்குகள் அற்ற வீதிகள் தெரிந்தன. கற்களும், மணலும், மழை வந்தால் மிருதுவான மண் தேங்கும் காய்ந்து வரண்ட இளமண் நிறம். அப்போது அவளுக்குப் பிடித்தமான தடிப் பாப்பிள்ளை விளையாட்டு (பெண்ணாகல்). 'சக்கைப் பணிய' மணலில் குந்தி இருக்கும் தாத்தா. சின்ன வயதில் நான் அழகாக இருப்பேனாம். குண்டுக் குண்டு கன்னங்களும், பெரிய விழிகளும் (இவை போதாதா?). மழலை என்கிற பருவமே இளமையோடு சம்மந்தப்பட்டதல்லவா ஜெகன். பிரமித்துப்போய் என் சிறு பிராயப் பக்கத்து வீட்டு மனிதர் சொல்லுகையில், வெட்கப்பட்டுச் சிரித்துக் கொண்டு இருப்பேன். அந்த பிம்பங்களை உடைத்து, என் வீரபிரதாபங்கள் தவிர்த்து, நான் அப்போ 'செரியான அழுகுண்ணியென்று' இமேஜ் இற்கு பங்கம் வருவது மாதிரி யாரும் பேசினால், என்னால் இப்பவுங்கூடத் தாங்கிக் கொள்ள முடியாது.
பாமரர் முதல் மனசு ஒவ்வாது வெறும் மூளை அப்டேற் பண்ணப்பட்ட புத்திஜீவிவரை எம்மைப் பற்றி வைத்திருக்கும் வக்கிரங்கள் தெரியாமல் அந்த 'அஞ்சேக்கர்' காணிக்குள் உருவான உலகத்தில் குட்டி இளவரசிகளாக, சின்னவயது, அம்மா தைத்துத் தரும் கையற்ற குட்டைச் சட்டைகளைப் போட்டுக்கொண்டு, இராஐகுமாரன் கதைகள் கூட ஒரு பவித்திரமான அழகை, அன்பை, காதலைப் போதித்த-வளர்த்த மயிலிறகால் உடம்பை வருடிப்போன கணங்களில், நாமும் தேவதைகளாய் உலா வந்திருக்கிறோம் என நினைக்கையிலே, மனசுக்குள் உலகத்து மகழ்ச்சியெல்லாம் அடங்கிப் போகின்றது. மங்கி வரும் ஞாபகங்களிடையே, அபூர்வமான இந்த மீட்டல்களில்தான், தூசி படிந்த வீணைகள் இசைக்கின்றன.
நானும் உன்னைப் பார்க்க வேண்டும். இருவரும் ஒரு முறைத் தொட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். எழுதும் போதுகளில் மோதுமுன் இளமுகம், இப்போ உன் வீட்டுக் கண்ணாடிக்கு ஞாபகம் இருக்குமா. போலி மனிதர்களின் அவநம்பிக்கை சிதறல்களைப் புறக்கணித்து எதுவும் உன்னை தடுக்காதவரை எழுது. ஆனால் ஒன்று, அதே வீதியில், அதே எண்ணங்களோடு, மீண்டும் ஒருமுறை நடக்கலாம் என்றா நினைக்கிறாய்.
~


நன்றி: கண்ணில் தெரியுது வானம், 2001
படம்: s.k.