Name:
Location: DIASborough, Ontario, Canada

Born in a small town in the Northern "Ceylon", having Tamil as mother tongue, moved to the capital Colombo in 1991; then to an Occupied Land (Called "Canada" [but itz ˈkænədə in this landerz tongue) in 1995; living in Diaspora ever since. With those place changes, there is still (and I think always) a small town gurl within me, who doesn't fit in the big city images of all sort.

Powered by Blogger

Tuesday, March 29, 2005

உன்னிடமிருந்து பிரிகிறேன்,
என் கீதத்தைப் பாட
அந்தரங்கத்தை இசைக்க
ஆன்மாவைப் போற்ற
என் சுயத்தை வளர்க்க

உரிமை ததும்பும்
உன்னுடைய பெண்ணாக இருப்பது
பேரானந்தம்தான்
அவளை நீ குறைத்துக் கொண்டாலும்
கீழ் நிலையில் வைத்திருந்தாலும்
என்னுடைய பெண் எகிறாள்.
இது நாள் வரையில்
சிவத்த ரோசாவுக்குரிய மெதுமை
தன்னை வருடி கனவு காணச் சொன்ன பழசை
தினக் குறிப்பில் புரட்டத் தளம்புகிறாள்,
உடைந்த கோப்பையின் துகள்கள் என
எடுத்துக் கொள்ள விரும்பி.

உனது தடைகளை
குற்றச்சாட்டுக்களை
விசாரணைகளை
கோபங்களை
அருவருப்புகளை மீறி-
உன்னிடமிருந்து பிரிகிறேன்
ஒரு சோடி கண்களால்
உலகில் வாழப் போவது
உன்னுடைய பெண்ணின் மரணத்தைக்
கொண்டாடும்
இரக்கமற்ற நான்.
~




2000 கணையாழி கனடா சிறப்பிதழ்

Sunday, March 27, 2005

காற்றிற்குக் காதுண்டென்று
சொல்லித் தந்தர் கவிஞர்
காற்றின் காதோரங்களில்
எதையோ சொல்லிவிடத் துடித்தேன்;
தவித்தேன்

நான் சலிப்புற்ற புத்திசீவியோ
கவிஞையோ அல்ல
என் ஓரங்களைக் கரைக்கும்
ஆன்மாவில் உருகி
ஜீவித்திருக்கும் பெண்

என்னிடமிருப்பது மானுட பிரக்ஞை

என்னைக் கட்டுக்குள் அடக்க
எங்ஙனம் முடியும்?
~




2000 கணையாழி கனடா சிறப்பிதழ்
அறைச் சுவர்களில்
கொழுவி இருக்கும் போஸ்டர்களில்
எனதும் அக்காவினதும் புகைப் படங்களில்
ஒரு பகல் விழிப்பில்
என் கண் முன் வெறுமை எரியும்
அந்த வெறுமை ஒருநாள்
தற்கொலைக்குத் தூண்டும்
வாழ்வை தோல்வி நெரிந்த போதுகளிற் கூட
தற்கொலையை நாட பிரக்ஞையற்றிருந்தவள்,
வெறி கொண்டு எழுந்தவள்,
என்றாவது விழிப்பில் அதை செய்யக் கூடின்
அதனை எதிருங்கள்

ஏனெனில்
நான் தற்கொலையை எதிர்க்கிறேன்;
எனக்கு இடப்பட்ட வாழ்வை
அதிகார ஆண் துர் கடவுளின்
இரக்கக் கசிவை
இயற்கை மடிக்கும் கண நொடிப்பிலும்
பூமியின் கரங்களைச் சுத்தப் படுத்தி
வாழ.
~




2000 கணையாழி கனடா சிறப்பிதழ்

கண்களைப் பராமரித்தவன்



ஜீலிஸ் பூசிக்கின் அழுகிய கண்களை
பராமரித்த
அந்த மரண தண்டனைக் கைதி
என்னுடன் எப்போதும் இருந்ததில்லை
அவனை நான் நேசித்தேன்
என் கனவுகளில் வருகிற நாயகன் அவன்தான்.
பூசிக் அவனை ஒரு அழகனாகவோ
ஆண்மையானவனாகவோ உருவம் தரவில்லை.
ஜீலிஸ் பூசிக் சொல்கிறான்
தன் பிண உடலுக்கு
உணவூட்ட
அவன் மிகவும் முயன்றான் என.
அப்படி ஒரு மனிதன்
தண்டனைக்குள்ளான பிற்பாடு
என்னைப் போல பெண்கள்
தடியன்களையும் தந்திரக்காரர்களையும்
மணந்தனர்
காலம் கண்களை அழுக்காக்கியது
அவர்களின் ஆனந்த விழிகள்
பராமரிப்பாரற்று அழுகின
அவர்களுக்கு ஒரு மரண தண்டனைக் கைதியின்
பராமரிப்பு மறுக்கப்பட்டிருந்தது
வெகுகாலத்துக்கு முன்பே
கறுப்பன் யேசு, யூதன் ஆக்கப்பட்டபோது
நல்ல ஆண்கள் இறந்து போயினர்
மேலும்
போராட்டங்களில்
கிளர்ச்சிகளில்
அடக்குதலில்
வக்கிரங்களில்
உயரத்தில்
அகண்ட தோள்களில்
தொடர்ச்சியாய் அவர்கள் மரணித்தனர்
ஜீலிஸ் பூசிக்கின் அழுகிய கண்களை
அருவருப்பற்று துப்பரவு செய்தவன்
1940 களில் வாழ்ந்திருக்கிறான் என்பது
என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது
~



2001 மூன்றாவது மனிதன், இதழ் 11